Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துப்புரவுப் பணி: ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்

Print PDF
தின மணி           27.02.2013

துப்புரவுப் பணி: ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்


ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த தில்லி மாநகராட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஷீலா தீட்சித் வலியுறுத்தினார்.

தில்லியில் "ஸ்வாபிமான் திவஸ்' (சுயமரியாதை தினம்) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தில்லி துப்புரவுத் தொழிலாளர் நல ஆணையம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் ஷீலா தீட்சித் பேசியதாவது:

இந்தியாவிலேயே, துப்புரவுப் பணிகளை கைகளால் மேற்கொள்வதற்கு தடை விதித்த முதல் மாநிலம் தில்லியாகும்.

பணி விதிகளின்படி துப்புரவுத் தொழிலாளர்களுக்கான வசதிகள், அவர்களது வேலை ஆகியவை நவீனப்படுத்தப்பட வேண்டும். அவர்களது பணிக்கு கௌரவமான ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்று அரசு விரும்புகிறது.

தில்லியில் துப்புரவுத் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாத்து அவர்களது அந்தஸ்தை உயர்த்துவதற்கு தில்லி அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.

அவர்களுக்கான தேவைகள் குறித்து தில்லி துப்புரவுத் தொழிலாளர் நல ஆணையத்தின் தலைவர் அளித்துள்ள கோரிக்கைகளில் சாத்தியமானவற்றை அரசு பரிசீலிக்கும் என்று ஷீலா தீட்சித் கூறினார்.

ஆணையத்தின் தலைவர் கர்னம் சிங் பேசுகையில், "2007-ல் ஏற்படுத்தப்பட்ட இந்த ஆணையம், துப்புரவுத் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

துப்புரவுத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் நூலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலவச தொலைபேசி உதவி எண் சேவை அளிக்கப்படுகிறது. துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி உதவிக்காக ஆணையம் மூலம் நிதியுதவியும் அளிக்கப்பட்டு வருகிறது.

தில்லியில் பல்வேறு மையங்களில், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தொழில்சார் படிப்புகளை இலவசமாக அளிக்கும் திட்டமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.

நிகழ்ச்சியில் தில்லி சட்டப்பேரவை தலைவர் யோகானந்த் சாஸ்திரி, போக்குவரத்து அமைச்சர் ரமாகாந்த் கோஸ்வாமி, எஸ்.சி.,எஸ்.டி.,பிரிவினருக்கான தேசிய ஆணையத்தின்   துணைத் தலைவர் ராஜ்குமார் வர்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Last Updated on Wednesday, 27 February 2013 10:42