Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி கூடுதல் கட்டடத்திற்கு நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை

Print PDF

தினமணி           01.03.2013

நகராட்சி கூடுதல் கட்டடத்திற்கு நிதி  ஒதுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை

மேட்டுப்பாளையத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் புதிய நகராட்சி அலுவலகத்தில் கூடுதல் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யுமாறு, உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நகர்மன்றத் தலைவர் டி.சதீஷ்குமார் அனுப்பிய மனுவின் விவரம்:

மேட்டுப்பாளையம் நகராட்சியில் பகுதி- 2, 2012-13ஆம் திட்டத்தின் கீழ், புதிய நகராட்சி அலுவலக கட்டடப் பணிக்கென அரசு சார்பில் ரூ. 50 லட்சமும், நகராட்சி நிதி சார்பில் ரூ. 50 லட்சமும் என ரூ. ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்பணியை மே மாதத்திற்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டு, தற்போது அஸ்திவாரம் வரை முடிக்கப்பட்டு தரைத்தளம், ஆர்சிசி, கான்கிரீட் தூண்கள் உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது ஒதுக்கப்பட்ட ரூ. ஒரு கோடி நிதியின் மூலம் தரைத்தளத்தில் நகராட்சி பகுதி அலுவலகக் கட்டடங்கள் மட்டுமே அமைக்க இயலும்.

புதிய அலுவலக கட்டடத்தில் முதல் தளத்தில் நகர்மன்றக் கூட்ட அரங்கமும் கூடுதல் அலுவலகப் பிரிவு கட்டடங்களும் கட்ட வேண்டியுள்ளது.

எனவே, ரூ. 1.45 கோடி மதிப்பில் மீண்டும் ஒரு மதிப்பீடு தயார் செய்து, சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் அலுவலகக் கட்டடத்தின் முக்கியத்துவம் கருதி, ரூ. 1.45 கோடி நிதியைப் பெற்றுத் தர வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2013-14ஆம் ஆண்டிற்கான குடிநீர் வசதி (ரூ. 75.50 லட்சம்), சாலை மேம்பாடு (ரூ. 407.50 லட்சம்), திடக்கழிவு மேலாண்மை (ரூ. 82.50 லட்சம்), மழைநீர் வடிகால் (ரூ. 264.50 லட்சம்) என அத்யாவசியப் பணிகளுக்கென ரூ. 830 லட்சத்திற்கு திட்ட மதிப்பு தயார் செய்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நிலை நகராட்சியான மேட்டுப்பாளையம் நகராட்சி மக்களின் நன்மையையும், இந்நகராட்சியின் தற்போதைய மோசமான நிதி நிலைமையையும் கருத்திற்கொண்டு, இந்த திட்ட மதிப்பீட்டு நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு, மற்றொரு மனுவில் உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு, நகர்மன்றத் தலைவர் சதீஷ்குமார் கோரியுள்ளார்.

Last Updated on Friday, 01 March 2013 10:43