Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் பிரச்னையை சமாளிக்க அவசரக் கூட்டம்

Print PDF
தினமணி                 12.03.2013

குடிநீர் பிரச்னையை சமாளிக்க அவசரக் கூட்டம்


கரூர் நகராட்சிப் பகுதிகளில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க புதிதாக ஆழ்குழாய்க் கிணறுகள் அமைப்பது, புதிய குடிநீர் தொட்டிகள் நிறுவுவது தொடர்பான ஒப்பந்தப்புள்ளிகளை நிறைவேற்றுவது தொடர்பான அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நகர்மன்றத் தலைவர் எம். செல்வராஜ் தலைமை வகித்தார்.  நகராட்சி ஆணையர் (பொ)  எல். கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கரூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வறட்சி நிவாரணத் திட்டம் 2012-13-ன் கீழ் ரூ. 2.36 கோடியில் பல்வேறு இடங்களில் ஆழ்குழாய்க் கிணறுகள், புதிதாக குடிநீர் தொட்டிகளை அமைப்பது தொடர்பாக வரப்பெற்ற ஒப்பந்தப்புள்ளிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

விவாதத்தில் குறைந்த ஒப்பந்தப் புள்ளிகள் அளித்துள்ளவர்களின் ஒப்பந்தப் புள்ளிகள ஏற்கலாம், மேற்கண்ட பணிகளுக்கு மதிப்பீட்டை விடக் கூடுதலான செலவுத் தொகைக்கு நிர்வாக அனுமதியும், செலவுத் தொகையை நகராட்சி குடிநீர் வடிகால் நிதியிலிருந்து செலவு செய்யவும், கூடுதல் செலவினத்தை 2012-13-ம் ஆண்டுக்கான திருத்திய வரவு - செலவுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அறிமுகம்: கரூர் நகராட்சியின் நகர்நல அலுவலராகப் பொறுப்பேற்றுள்ள ஹேமச்சந்த் காந்தி கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

இவர் 2006 முதல் 2010 வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராகப் பணிபுரிந்தார்.  இதையடுத்து 2 ஆண்டு சென்னையில் மேல்படிப்பு படித்துவிட்டு. தற்போது கரூர் நகராட்சி நகர் நல அலுவலராகப் பொறுப்பேற்றுள்ளார்.

விவாதம்:  ஸ்டிபன் பாபு (காங்கிரஸ்):  புதிய நகர் நல அலுவலரை வரவேற்கிறோம். இனாம் கரூர் பகுதியில் அதிகளவில் இறைச்சிக் கடைகள் உள்ளன.  சுகாதாரமற்ற பல இறைச்சிக் கடைகளால் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நகர் நல அலுவலர் இனாம்கரூர் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தலைவர்: கரூர் நகராட்சியின் அனைத்து வார்டுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து அவர் பணியாற்றுவார்.

ஏகாம்பரம் (அதிமுக): நகர்மன்றக் கூட்டத்தில் ஒவ்வொரு மாதமும் தாக்கல் செய்யப்படும்  வரவு - செலவு, பிறப்பு, இறப்புக் கணக்குகள் அண்மைக் காலமாக தாக்கல் செய்யப்படுவதில்லை.

தலைவர்: கரூர் நகராட்சியில் ஒவ்வொரு மாதமும் வரவு, செலவு தாக்கல் செய்யும் வழக்கம் இல்லை.

இருந்தாலும் இதுகுறித்து அதிகாரிகளுடன் கலந்த பேசி முடிவு எடுக்கப்படும்.

ராஜேஷ் (காங்கிரஸ்): திருச்சி சாலையில் கட்டப்பட்டுள்ள வடிகாலில், கழிவு நீர் செல்ல வழியில்லாமல் தேங்கியுள்ளது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.

தலைவர்: நானே நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.

இதையடுத்து கூட்டம் நிறைவுற்றது. நகர்மன்ற துணைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன் நன்றி கூறினார்.