Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குரூப்–1 தேர்வில் வெற்றி பெற்றால் சொந்த மாநிலத்தில் உயர்ந்த பதவி கிடைக்கும் மாணவர்களுக்கு, கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை

Print PDF
தினத்தந்தி                    28.03.2013

குரூப்–1 தேர்வில் வெற்றி பெற்றால் சொந்த மாநிலத்தில் உயர்ந்த பதவி கிடைக்கும் மாணவர்களுக்கு, கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை


குரூப்–1 தேர்வில் வெற்றி பெற்றால் சொந்த மாநிலத்திலேயே உயர்ந்த பதவி கிடைக்கும் என்று மாணவர்களுக்கு, கோவை மாநகராட்சி ஆணையாளர் லதா அறிவுரை கூறினார்.

சிவில் சர்வீசஸ் பயிற்சி

கோவை நஞ்சப்பா ரோட்டில் உள்ள உயர்கல்வி மையத்தில் இலவச சிவில் சர்வீசஸ் பயிற்சி பெறும் மாணவ–மாணவிகள் மற்றும் சிவில் சர்வீசஸ் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப் பட்டு வருகிறது. இதில், சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி ஆணையாளர் லதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

புத்தகங்கள் தான் மனிதனுக்கு உற்ற துணைவனாக விளங்குகின்றன. இதன் மூலமே வாழ்க்கை பாடத் தை கற்றுக்கொண்டு, நம்முடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ள முடியும். புத்தகங்கள் மூலமாக பரந்த அறிவை பெறுவதன் மூலம் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெற முடியும். நாம் பெற் றுள்ள அறிவை விட, மனநிலை மற்றும் எண்ண ஓட்டங்களே நம்முடைய வெற்றியை தீர்மானிக்கின்றன.

நேர்மறை எண்ணங்கள்

இதனால் மாணவர்கள் எப்போதும் நேர்மறையான எண்ணங்கள் மிக்கவர்களாக விளங்க வேண்டும். போட்டி தேர்வுகளில் தோல்வி அடையாமல் வெற்றி பெற முடியாது. சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் மாணவர்கள் தோல்விகளை கண்டு துவண்டு விடக்கூடாது. ஏனெனில் தோல்விகள் தான் வாழ்க்கை பாடத்தை நமக்கு கற்றுத்தருகிறது.

கல்விதான் பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. பெண்களின் முன்னேற்றமே சமுதாயம் மற்றும் நாட்டின் முன்னேற்றம். மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பெண்களுக்கு எதிரான வன்முறைகளை சமுதாயத்தில் இருந்து களைய முடியும். ஆணும், பெண்ணும் சமம் என்பதை, ஆண்கள் குழந்தையாக இருக்கும் போதே ஏற்படுத்த வேண்டும்.

குரூப்–1 தேர்வு

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் குரூப்–1 தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் சொந்த மாநிலங்களில், உயர்ந்த பதவிகளில் பணியாற்ற முடியும். இதற்கு பள்ளி புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்களை நன்றாக படிக்க வேண்டும்.

செய்தித்தாள்களை படிப்பது, டி.வி.யில் செய்திகள் பார்ப்பதன் மூலம் மாணவர்கள் பொது அறிவு வளரும். கடின உழைப்பு, மனஉறுதி, நல்ல எண்ண ஓட்டங்கள் இருந்தால் தேர்வில் எளிமையாக வெற்றி பெற முடியும்.

இவ்வாறு ஆணையாளர் லதா கூறினார்.

மாற்றம் வேண்டும்

அதைத்தொடர்ந்து உயர்கல்வி மைய தலைவரும், அரசு கலைக்கல்லூரி பேராசியருமான கனகராஜ் பேசும் போது, சிவில் சர்வீசஸ் தேர்வில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. அதில் பல்வேறு சர்ச்சை ஏற்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது உள்ள தேர்வு முறை 34 ஆண்டுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. கால சூழ்நிலை மாறிவருகிறது. நாட்டின் தேவை, பொருளாதார நிலை மாறி உள்ளது. இதனால் சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகளில் பிற்காலத்தில் மாற்றங்கள் வரும். அதற்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். புதிய சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு படிப்பு மற்றும் தேர்வு அணுகுமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இலவச சிவில் சர்வீசஸ் பயிற்சி பெறும் மாணவ–மாணவிகள் 100–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உயர்கல்வி மையத்தை சேர்ந்த வசந்தகுமார் நன்றி கூறினார்.