Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி சார்பில் மலிவு விலை உணவகங்கள் வேலூரில், எப்போது திறக்கப்படும் அதிகாரி பதில்

Print PDF
தினத்தந்தி        04.04.2013
 
மாநகராட்சி சார்பில் மலிவு விலை உணவகங்கள் வேலூரில், எப்போது திறக்கப்படும் அதிகாரி பதில்

மாநகராட்சி சார்பில் மலிவு விலை உணவகங்கள் வேலூரில் எப்போது திறக்கப்படும் என்பதற்கு அதிகாரி பதில் அளித்துள்ளார்.

மலிவு விலை உணவகங்கள்


சென்னை மாநகராட்சி மூலம் முதல் கட்டமாக 73 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டன. அது போல வேலூர் மாநகராட்சி சார்பில் 60 வார்டுகளிலும் மலிவு விலை உணவகங்கள் திறக்க வேண்டும் எனவும் முதல் கட்டமாக வேலூர் மாநகராட்சி, புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், காட்பாடி ரெயில் நிலையம் அருகே உள்பட 10 இடங்களில் மலிவு விலை உணவகங்களை திறக்க வேண்டும் என மாநகராட்சி கவுன்சிலரும், கல்விக்குழு தலைவருமான சூர்யாச்சாரி மாநகராட்சி கூட்டங்களில் வலியுறுத்தி பேசி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2–ந் தேதி சென்னையில் மேலும் 127 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டன. ஆக மொத்தம் 200 மலிவு விலை உணவகங்கள் சென்னையில் தற்போது இயங்கி வருகின்றன. சட்டசபையில் முதல் –அமைச்சர், மலிவுவிலை உணவகங்கள் இதர மாநகராட்சிகளுக்கும் விரிவு படுத்தப்படும் என அறிவித்தார்.

(மலிவு விலை உணவகங்களில் இட்லி 1 ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்கப்படுவதால், சென்னையில் திறக்கப்பட்ட மலிவு விலை உணவகங்கள் பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன).

வேலூரில் எப்போது?

வேலூர் மாநகராட்சி சார்பில், மலிவு விலை உணவகங்கள் எப்போது திறக்கப்படும், அதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி விட்டதா? என்று வேலூர் மாநகராட்சி கமிஷனர் ஜானகியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

வேலூரில் மலிவு விலை உணவகம் திறப்பது மற்றும் அதற்கான விதிமுறைகள் பற்றி எங்களுக்கு இதுவரை தகவல் எதுவும் வரவில்லை. அதே சமயம் எந்த நேரமும் அனுமதி கிடைக்கலாம் எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைத்ததும் தாமதம் இல்லாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:–

வேலூர் மாநகராட்சிக்கு சொத்து வரி, தொழில் வரி, கடை வாடகை, தரை வாடகை, குடிநீர் கட்டணம் என்று பல்வேறு இனங்களில் வரவேண்டிய நிலுவை தொகையை விரைவாக வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த மாதம் (மார்ச்) சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வரிவசூல் மையங்கள் இயங்கின. அதன் பயனாக சுமார் ரூ.23 கோடிவரை வசூல் ஆகியுள்ளது. எனவே இந்த மாதமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரி வசூல் மையங்களை இயக்கலாமா? என்று ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.