Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அம்மா உணவகத்துக்கு அமோக வரவேற்பு

Print PDF

தினமணி                  08.04.2013

அம்மா உணவகத்துக்கு அமோக வரவேற்பு

சென்னை மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களுக்கு பொதுமக்கள் இடையே அமோக வரவேற்பு காணப்படுகிறது.

குறைந்த விலையில் ஏழைகளுக்கு உணவு வழங்கும் விதமாக சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 200 வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 15 உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா பிப்ரவரி மாதம் திறந்து வைத்தார். இப்போது 200 உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த உணவகங்களில் இட்லி ரூ. 1-க்கும், சாம்பார் சாதம் ரூ. 5-க்கும், தயிர் சாதம் ரூ. 3-க்கும் விற்கப்படுகின்றன.  பெரும்பாலும் ஏழை மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளதால் இவற்றுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

காலை 7 மணி முதல் 10 மணி வரையில் இட்லி, பகல் 12 மணி முதல் 3 மணி வரையில் சாம்பார் சாதம், தயிர் சாதம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நாளுக்கு நாள் பெருகிவரும் கூட்டத்தால் காலை 9 அல்லது 9.30 மணிக்குள் இட்லிகள் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. மதியம் 2 மணிக்கே சாத வகைகள் தீர்ந்துவிடுகின்றன. இதனால் தாமதமாக வரும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள்: சென்னையில் தொடங்கப்பட்டுள்ள 200 உணவகங்களிலும் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஒரு உணவகத்துக்கு 10 முதல் 12 பெண்கள் வரை பணியில் உள்ளனர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு தலா ரூ. 300 வரை ஊதியமாக வழங்கப்படுகிறது.

அதிகாரிகள் விளக்கம்: இந்த உணவகங்களில் குறைகள் ஏதும் இல்லை என்று இங்கு வழக்கமாக உண்பவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் ஊறுகாய், அப்பளம் போன்ற பொருள்கள் கொடுக்கப்படாதது குறித்து வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, இப்போது அம்மா உணவகங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் உண்பவர்களும் சுகாதாரமான முறையில் உடலுக்கு கேடு விளைக்காத பொருள்களை விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊறுகாய் மற்றும் அப்பளம் போன்றவற்றில் உப்பு, காரம், புளிப்பு சுவை அதிகமாக இருக்கும். இந்த மூன்றும் உடல்நலத்துக்கு பெரிதும் கேடு விளைப்பவை. இதன் காரணமாகவே இவை வழங்கப்படுவதில்லை. பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் கூடுதலாக உணவு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்று தெரிவித்தனர்.

பெரும்பாலான பொதுமக்கள், அம்மா உணவகத்தில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கின்றனர். ஆனால் சில இடங்களில் உணவு சுகாதாரமாக இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.  சிறப்பான ஒரு திட்டத்தை மிகுந்த கவனத்தோடு செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 பேர் கண்காணிப்புக் குழு

அம்மா உணவகத்தில் எந்தவித சுகாதா சீர்கேடும் நடைபெறாத வண்ணம் தடுக்க 4 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.

இந்தக் குழுவில் ஒரு சுகாதார அலுவலர், ஒரு சுகாதார அதிகாரி மற்றும் இரண்டு சுகாதார ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர். தென் சென்னையில் ஒருநாள், வடசென்னையில் ஒரு நாள் என தினமும் இந்த குழு ஆய்வு செய்யும்.

ஒவ்வொரு நாளும் ஆய்வு தொடர்பான அறிக்கையை மாநகராட்சி ஆணையரிடம் இந்தக் குழு சமர்ப்பிக்கும்.

நாள்தோறும்  2.5 லட்சம் இட்லி விற்பனை

அம்மா உணவகங்களில் கூட்டம் அலைமோதுவதால் அனைத்து உணவகங்களிலும் சேர்த்து ஒரு நாளைக்கு சுமார் 2.5 லட்சம் இட்லிகளும், 60 ஆயிரம் சாம்பார் சாதங்கள் மற்றும் 40 ஆயிரம் தயிர் சாதங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

சராசரியாக ஓர் உணவகத்தில் சுமார் 1,500 இட்லிகள் விற்கப்படுகின்றன. ஒரு இட்லியில் 110 கலோரியும், சாம்பார் சாதத்தில் 258 கலோரியும், தயிர் சாதத்தில் 117 கலோரியும் இருக்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

விலை ஏற்றினாலும் பரவாயில்லை

ஜெகநாதன் (தனியார் துப்புரவு நிறுவன ஊழியர்): அம்மா உணவகத்தில் எந்த பிரச்னையும் இல்லை. சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதங்களுக்கு ஊறுகாய், அப்பளம் கொடுத்தால் நன்றாக இருக்கும். இட்லிக்கு சட்னியும் கொடுக்கலாம்.

இட்லியை சூடாக சாப்பிடும்போது மிருதுவாக உள்ளது. ஆனால் சூடு ஆறிய நிலையில் சாப்பிட்டால் கொஞ்சம் கடினமாக இருக்கிறது. மதியத்தில் சாம்பார் சாதம் குழைகிறது. ஆனால் வெளியில் சாப்பிடும் உணவைவிட இங்கு சுவையாக இருக்கிறது.

சாம்பார் மற்றும் தயிர் சாதம் இன்னும் ரூ. 2 அல்லது 3 உயர்த்தினால்கூட பரவாவில்லை. அப்பளம், வடை போன்றவற்றை வழங்கலாம். இப்போது பெரும்பாலானவர்கள் வெளியில் இருந்து வடை, ஊறுகாய் வாங்கி வருகின்றனர். அவற்றை உணவகத்திலேயே வழங்கினால் பணம் மிச்சமாகும். கூட்டம் அதிகமாக உள்ளதால் காலை 9.30 மணிக்கே இட்லி தீர்ந்து விடுகிறது.

நடுத்தர மக்களையும் ஈர்க்க ராமபத்திரன் (ஓய்வுபெற்ற தனியார் நிறுவன அதிகாரி): இங்கு வெளியில் அதிக விலையில் விற்கப்படும் இட்லியைவிட நல்ல இட்லி கிடைக்கிறது. தட்டுக்கள் சுத்தமாக கழுவி வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் தரை மற்றும் மேஜை ஆகியவற்றில் சிந்தும் சாம்பார், சாதங்கள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளன. இதனால் ஈக்கள் மொய்க்கின்றன. சில வார்டுகளில் சுகாதாரமற்ற இடங்களில் உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

ஒரு ரூபாய்க்கு யாராலும் இட்லி கொடுக்க முடியாது. ஆனால் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். தரை மற்றும் மேஜையில் சிந்தும் உணவுப் பொருள்களை அடிக்கடி சுத்தம் செய்தால் நடுத்தர மக்களையும் இந்த உணவகங்கள் கவரும். உணவகங்களை மேலும் தரம் உயர்த்த வேண்டும்.

நல்ல திட்டம்

சாய்நாதன் (லேத் பட்டறை தொழிலாளி): அம்மா உணவகத்தில் தினமும் சாப்பிடுகிறேன். அனைத்து உணவு வகைகளும் நன்றாக உள்ளன. ஒரு ரூபாய்க்கு இட்லி யார் தருவார்கள். ஆனால் இடத்தை சுத்தமாக வைத்திருந்தால் நன்றாக இருக்கும். மொத்தத்தில் இது ஒரு நல்ல திட்டம்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை ரமேஷ் (பிரிண்டிங் பிரஸ் தொழிலாளி):கடந்த ஒரு மாதமாக வேலைக்குச் செல்லும்போது உணவு கொண்டு செல்வதில்லை. காலையிலும் வீட்டில் சாப்பிடுவதில்லை. தினமும் அம்மா உணவகத்தில்தான் சாப்பிடுகிறேன்.

ஊறுகாய், வடை போன்றவற்றை உணவகத்திலேயே வழங்கினால் சிறப்பாக இருக்கும். இவையும் வெளியில் கிடைப்பதைவிட சுத்தமாக கிடைக்கும்.

உணவகத்துக்கு வரும் பொதுமக்கள் ஆங்காங்கே தட்டுக்களை போட்டுவிட்டு செல்கின்றனர். மேலும் சிலர் உணவகம் அருகிலேயே சிறுநீர் கழித்துவிட்டு செல்கின்றனர். அவர்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு தேவை.

Last Updated on Monday, 08 April 2013 07:26