Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவையில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்கள்

Print PDF
தினமணி        09.04.2013

கோவையில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்கள்

கோவை மாநகராட்சியில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்களைத் திறக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் மலிவு விலை உணவகங்களை அண்மையில் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த உணவகங்களின் வெற்றியை அடுத்துக் கோவை மாநகராட்சியிலும் திறக்க முயற்சிகள் நடைபெற்றன. கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் 15 உணவகங்களை திறக்கத் தீர்மானிக்கப்பட்டது. எந்தெந்த இடங்களில் திறக்கலாம் என்பது குறித்த திட்டங்களுடன் கோவை மாநகராட்சி ஆணையாளர் க.லதா, துணை ஆணையாளர் சு.சிவராசு, மாநகராட்சி நல அலுவலர் ஆர்.சுமதி, மாநகராட்சிப் பொறியாளர் (பொறுப்பு) கே.சுகுமார் ஆகியோர் இதற்கான அரசு அனுமதியைப் பெறுவதற்காக சென்னையில் திங்கள்கிழமை முகாமிட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிக் கட்டடங்கள், குழந்தைகள் நல மையங்கள் உள்ளிட்ட இடங்களில் உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன. புலியகுளம் பகுதியில் அனைத்து உணவகங்களுக்குமான மைய சமையல் கூடம் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

புலியகுளம் பகுதியில் இருந்து அனைத்து உணவகங்களுக்கும் உணவுப் பொருள்களைச் சப்ளை செய்வதற்குப் பதிலாக, 5 மண்டலங்களிலும் தனித்தனியாக சமையல் கூடங்கள் அமைக்க அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் 5 மண்டலங்களிலும் சமையல் கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. உணவுப் பொருள்கள் முழுவதும் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் இருந்தும், சிந்தாமணி கூட்டுறவு சங்கத்தில் இருந்தும், ஆவின் நிறுவனத்தில் இருந்து தயிரையும், தினசரி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளையும் பெற்றுக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மாநகராட்சி ஆணையாளர் க.லதா கூறுகையில், மலிவு விலை உணவகங்கள் திறப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்படுகிறது. விரைவில் உணவகங்களைத் துவக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

ஒவ்வொரு மலிவு விலை உணவகத்திலும் தினமும் 100 பேருக்கு உணவு தயாரிக்கப்பட உள்ளது. இந்த உணவு முழுவதும் விற்பனையாகிவிட்டால் நல்லது.

விற்பனை குறைவாக இருந்தால் என்ன செய்வது என்ற பிரச்னையும் மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் உள்ளது. மலிவு விலை உணவகங்களில் நஷ்டம் ஏற்பட்டால் அதை மாநகராட்சி வருமானத்தில் இருந்து சரி செய்யவும் அரசு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மலிவு விலை உணவகங்களை நடத்தும் பொறுப்பை மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் ஒப்படைக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.