Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை மாநகராட்சியில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் அமைக்க திட்டம் இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்

Print PDF
தினத்தந்தி        09.04.2013

கோவை மாநகராட்சியில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் அமைக்க திட்டம் இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்


கோவை மாநகராட்சியில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

மலிவுவிலை உணவகங்கள்

ஏழை எளிய மக்களின் நலனுக்காக சென்னையில் ஏற்கனவே 200 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்கள் மூலம் இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.

இந்த மலிவு விலை உணவகங்கள் மற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதைதொடர்ந்து கோவை மாநகராட்சி பகுதியில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட உள்ளன.

சென்னையில் ஆலோசனை

இது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக கோவை மாநகராட்சி ஆணையாளர் லதா, துணை ஆணையாளர் சிவராசு மற்றும் அதிகாரிகள் சென்னை சென்று, உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

கோவையில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்களை திறப்பது என்றும், எந்தெந்த பகுதிகளில் அமைப்பது, யாரை வைத்து நடத்துவது என்பது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:–

இடம் தேர்வு

ஏழை–எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக கோவை மாநகராட்சி பகுதியில் மலிவு விலை உணவகங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த உணவகங்களை எந்தப்பகுதியில் திறப்பது தொடர்பாக இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் எவை எல்லாம் காலியாக இருக்கிறது என்பது கணக்கிடப்பட்டு வருகிறது.

மேலும் காலியாக உள்ள கட்டிடத்தில் மலிவு விலை உணவகங்களை அமைக்கலாமா? அல்லது வேறு எங்காவது அமைக்கலாமா என்று ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த உணவகத்தை மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சுயஉதவிக்குழுக்கள்

இந்த திட்டத்தை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்காக கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் எவை என்பது கணக்கிடப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்படும் சுயஉதவிக்குழுக்கள் மூலம் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

தற்போது அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட 15 உணவகங்களில் முதற்கட்டமாக எத்தனை இடங்களில் உணவகங்களை அமைப்பது என்று ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இடங்களில் உணவகங்களை அமைத்துவிட்டு மீதமுள்ள பகுதியில் பின்னர் அமைக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.