Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஸ்ரீரங்கத்தில் "அம்மா' உணவகம் மாநகராட்சி "விறுவிறு' ஏற்பாடு

Print PDF
தினமலர்         10.04.2013

ஸ்ரீரங்கத்தில் "அம்மா' உணவகம் மாநகராட்சி "விறுவிறு' ஏற்பாடு

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் விரைவில், "அம்மா' உணவகம் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் விஷம்போல உயரும் விலைவாசி காரணமாக, நடுத்தர, ஏழை, எளிய மக்கள் மற்றும் மாற்று மாவட்டங்களுக்கு சென்று கூலி வேலை செய்து பிழைப்பவர்கள், மூன்று வேளையும் சாப்பிட முடியாமல் பெரும் அல்லலுக்கு உள்ளாயினர்.

அதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு சிறப்பு நடவடிக்கையாக, மலிவு விலை உணவகத்தை திறக்க திட்டமிட்டு, கடந்த மாதம், சென்னை மாநகராட்சி சார்பில், சென்னையிலுள்ள, 200 வார்டுகளிலும், "அம்மா' உணவகம் திறக்கப்பட்டது.

அங்கு, இட்லி ஒரு ரூபாய், சாம்பார் சாதம், 5 ரூபாய், தயிர்சாதம், 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தும் இந்த உணவகத்தில் சாப்பிடுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. பார்சல் வழங்கப்படுவதில்லை.

தமிழகத்தில் உள்ள மற்ற மாநகராட்சியிலும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருச்சியில், "அம்மா' உணவகம் திறக்க முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கிறது.

திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி, கோ.அபிஷேகபுரம் கோட்ட சானிட்டரி இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன் ஆகியோர் நேற்று முன்தினம் சென்னை சென்றனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள, "அம்மா' உணவகங்களை பார்வையிட்டனர்.

ஸ்ரீரங்கம் "ஃபர்ஸ்ட்': தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியில், "அம்மா' உணவகத்தை முதலில் திறக்க திட்டமிட்டுள்ளனர். இம்மாத இறுதிக்குள், ஸ்ரீரங்கத்தின் மையப் பகுதியில் உணவகம் திறக்கப்படும் என்று தெரிகிறது.

திருச்சி மாநகராட்சியின் மையப்பகுதிகளான சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட், சத்திரம் பஸ்ஸ்டாண்ட், காந்தி மார்க்கெட், திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடங்கிய, 15 வார்டுகளில், (கூட்டுத்தொகை 6) முதற்கட்டமாக, "அம்மா' உணவகம் திறக்கப்படும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.