Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியாக திண்டுக்கல் அறிவிப்பு: பொதுமக்கள் வரவேற்பு

Print PDF
தினமணி        11.04.2013

மாநகராட்சியாக திண்டுக்கல் அறிவிப்பு: பொதுமக்கள் வரவேற்பு


திண்டுக்கல் நகராட்சியை மாநகராட்சியாக நிலை உயர்த்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை சட்டப்பேரவையில் அறிவித்தார். இது குறித்து திண்டுக்கல் நகர மக்களின் கருத்து:

நகர்மன்றத் தலைவர் வி.மருதராஜ்: கடந்த 149 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் திண்டுக்கல் நகராட்சி, தமிழகத்தின் பழமையான நகராட்சியாகவும் விளங்கியது. இந்நிலையில், மாநகராட்சியாக நிலை உயர்த்தக் கோரி 2 மாதங்களுக்கு முன் நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட தமிழக முதலவர், இன்று சட்டப்பேரவையில் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இதன்மூலம், திண்டுக்கல் நகர மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்படும். அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வருக்கு, திண்டுக்கல் நகர மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நகராட்சி உறுப்பினர் தனபால் (பாஜ.க.): மாநகராட்சியாக அறிவித்த தமிழக முதல்வருக்கு பா.ஜ.க. சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேலாவது, கிடப்பில் போடப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நகரின் அனைத்துப் பகுதியிலும் தரமான சாலைகள் கிடையாது. குடிநீர் பிரச்னை பல ஆண்டுகளாக தொடர்கிறது. பாதாளச் சாக்கடைத் திட்டப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், தமிழக அரசும் அதிக நிதி ஒதுக்கீடு செய்து, நகரின் வளர்ச்சிக்கு உதவி செய்யவேண்டும் என்றார்.

ஏ.பி.சி. தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் க. மணிவண்ணன்: திண்டுக்கல்லுக்கு மாநகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டதை வரவேற்கிறோம். ஆனால், நகரின் அடையாளமும், பாரம்பரியமும் பாதுகாக்கப்படும் வகையில், மாநகராட்சியின் செயல்பாடு அமையவேண்டும். நகரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, போக்குவரத்து நெரிசலை சீர் செய்யவேண்டும். குறிப்பாக, நகரில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை பராமரிக்க நடவடிக்கை எடுப்பதோடு, குறுகலானப் பாதைகளை ஒருவழிப் பாதையாகவும் மாற்றி அமைக்க வேண்டும். மேலும், திண்டுக்கல்லின் அடையாளமாக இருந்த பூட்டுத் தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்தும், மலைக்கோட்டையை சிறப்பான சுற்றுலாத் தளமாக மாற்றியும் திண்டுக்கல்லின் முக்கியத்துவம் காக்கப்பட வேண்டும் என்றார்.

கல்லூரி மாணவி பி.சாந்தி: மாநகராட்சி அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், நகர மக்களுக்கு குடிநீர் விநியோகம், 15 நாளுக்கு ஒருமுறையே வழங்கப்படுகிறது. இதனை சரி செய்வதற்கு உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், நகரப் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை.

மாநகராட்சி பேருந்து நிலையத்தின் நிலை இப்படி இருந்தால், அது திண்டுக்கல்லுக்கு மிகவும் அவமானமாக இருக்கும். எனவே, மாநகராட்சி நிர்வாகத்தின் முதல் நடவடிக்கையாக பேருந்து நிலையம் சீர்செய்யப்பட வேண்டும் என்றார்.

ஆட்டோ ஓட்டுநர் கே.சுப்பிரமணி:

மாநகராட்சி அறிவிப்பு, அரசின் நிதி நிலையை பெருக்குவதற்கே வழிவகை செய்யும். இதனால், வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் பன்மடங்கு அதிகரிக்கும். நகர மக்களுக்கு அடிப்படைத் தேவையான குடிநீர் வசதியை முதலில் நிறைவேற்ற வேண்டும். அதேபோல், நகர் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.