Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சித்திரைத் திருவிழா கடைகளுக்கு வாடகை வசூலிக்கும் உரிமம்: மானாமதுரை பேரூராட்சி சார்பில் ஏலம்

Print PDF
தினமணி        11.04.2013

சித்திரைத் திருவிழா கடைகளுக்கு வாடகை வசூலிக்கும் உரிமம்:  மானாமதுரை பேரூராட்சி சார்பில் ஏலம்


சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் வைக்கப்படும் கடைகளுக்கு வாடகை வசூல் செய்துகொள்ளும் உரிமம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முதல்முறையாக புதன்கிழமை ஏலம் விடப்பட்டது.

மானாமதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் போது வைகையாற்றுக்குள்ளும் மற்றும் கோவில் அமைந்துள்ள பகுதிகளிலும் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்யப்படும். மேலும் வைகையாற்றுக்குள் பொழுதுபோக்கு அம்சமாக ராட்டினங்கள் அமைக்கப்படும். கடந்தாண்டு இந்த கடைகளுக்கும், ராட்டினங்களுக்கும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நேரடியாக வாடகை வசூல் செய்யப்பட்டது.

இந்தாண்டு சித்திரைத் திருவிழா கடைகளுக்கு வாடகை வசூல் செய்துகொள்ளும் உரிமத்தை ஏலம் விட, பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏப்ரல் 16-ஆம் தேதி மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவில் திருவிழாவும், இதைத் தொடர்ந்து வீரஅழகர் கோவில் திருவிழாவும் நடைபெறுகிறது.

இந்த இரு கோவில்களிலும் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் திருவிழா கடைகளுக்கு வாடகை வசூல் செய்து கொள்வதற்கான உரிமம் ஏலம் விடப்பட்டது. பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் சஞ்சீவி ஏலத்தை நடத்தினார். இதில் தலைவர் ஜோசப்ராஜன் கலந்து கொண்டார். ஏலம் எடுப்பதில் போட்டி நிலவிய நிலையில் இறுதியாக ரூ. ஒரு லட்சத்து இரண்டாயிரத்து ஐநூறுக்கு கடைகள் ஏலம் போனது. பேரூராட்சி நிர்ணயித்த கட்டணம் மட்டும் தான் வாடகையாக வசூலிக்க வேண்டும் என ஏல நிபந்தனையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.