Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருப்பூரில் 5 இடங்களில் அம்மா உணவகம்

Print PDF
தினமணி       27.04.2013

திருப்பூரில் 5 இடங்களில் அம்மா உணவகம்


சென்னையை போல திருப்பூரிலும் 5 இடங்களில் மலிவு விலை அம்மா உணவகம் திறக்க மாநகராட்சி தீர்மானித்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சிக் கூட்டம் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை மேயர் சு.குணசேகரன், ஆணையர் கே.ஆர்.செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.

இதில் மலிவு விலையில் உணவு வழங்கக்கூடிய அம்மா உணவகம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் விவரம்: திருப்பூர் மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்டு, 159.35 ச.கி.மீ., பரப்பளவுடன் 60 வார்டுகளை உள்ளடக்கி உள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8.77 லட்சம் மக்கள் நகரில் வசிக்கின்றனர்.

பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூருக்கு தினமும் 1.5 லட்சம் மக்கள் வெளியூர்களிலிருந்து தொழில் நிமித்தமாக வந்து செல்கின்றனர்.

தொழிலாளர்கள் நிறைந்த இம்மாநகரில் அவர்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவு கிடைப்பதில்லை. முதல்வர் ஆணைப்படி, திருப்பூர் மாநகராட்சி பகுதியிலும் சலுகை விலையில் தரமான உணவு வழங்கக் கூடிய அம்மா உணவகம் 5 இடங்களில் முதற்கட்டமாகத் தொடங்கப்படும்.

15 வேலம்பாளையம் மண்டல அலுவலக வளாகம், கொங்கு நகர் (சின்னச்சாமியம்மாள் மாநகராட்சி பள்ளி அருகில்), காமராஜர் சாலை பழைய பேருந்து நிலையம், குமரன் வணிக வளாகம்,  நல்லூர் மண்டல அலுவலக வளாகம் என 5 இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அம்மா உணவங்களில் உணவு தயாரிப்புக்கான செலவு ரூ.1.5 கோடி, விற்பனை மூலமாக கிடைக்கும் வருவாய் ரூ.65.7 லட்சம். இதில் பற்றாக்குறை தொகை ரூ.84.92 லட்சம் மாநகராட்சி பொதுநிதியில் இருந்து வழங்கப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து கிலோ ரூ.1-க்கு அரிசி வாங்கப்படும். உளுந்து, பருப்பு, சமையல் எண்ணெய் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் விற்பனை செய்யப்படும் விலைக்கு வாங்கப்படும்.

மிளகாய், புளி உள்ளிட்ட பொருள்கள் வளர்மதி கூட்டு சிறப்பு அங்காடியில் இருந்தும், காய்கறிகள் வெளிச் சந்தையிலும், தயிர் ஆவின் நிறுவனத்தில் இருந்தும் கொள்முதல் செய்யப்படும்.

அம்மா உணவகம் கட்டடம்: அம்மா உணவகம் அமைப்பதற்காக மேற்கண்ட 5 இடங்களிலும் தலா ரூ.25 லட்சம் செலவில் புதிதாகக் கட்டடம் கட்டடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானங்கள் அனைத்து கவுன்சிலர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.