Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

முன்னோடி வட்டமாக மேட்டுப்பாளையம் தேர்வு

Print PDF
தினமணி        04.05.2013

முன்னோடி வட்டமாக மேட்டுப்பாளையம் தேர்வு

இணையவழி மூலம் நில ஆவணங்களை பராமரிக்கும் முன்னோடி திட்டத்திற்கு முன்னோடி வட்டமாக மேட்டுப்பாளையம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தெரிவித்தார்.

இது குறித்து மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகதத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு ஆட்சியர் தலைமை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர் சாந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நில அளவை பதிவேடுகள் துறை இணை இயக்குநர் முத்துக்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியது: சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களின் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா, வட்ட அலுவலகங்களில் நிலப் பதிவுகளுக்கும் பத்திரப் பதிவுத் துறைகளிலுள்ள ஆவணங்களுக்கும் தொடர்பின்றி இருப்பதை சுட்டி காட்டினார்.

பத்திர பதிவுத்துறை மற்றும் வட்ட அலுவலகங்களை இணைப்பதற்கு முதல் கட்டமாக வட்ட அலுவலகங்களில் உள்ள நிலப்பதிவுகளை இணையவழி (ஆன்-லைன்) மூலம் பதிய அவர் உத்தரவிட்டார்.

அதன்படி  தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வட்டத்தை தேர்வு செய்து அந்த வட்டத்திலுள்ள நிலப்பதிவுகளை தேவையான தொழில்நுட்பங்களை கொண்டு ஆன்-லைன் மூலம் பதிய வைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் வட்டம் முன்னோடி வட்டமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதையொட்டி இந்த வட்டத்திலுள்ள நில உடமைதாரர்களின் நிலப் பதிவுகளை  கணினியில் பதிவு செய்வதற்கு முன்னர் தங்கள் ஆவணங்களை வட்ட அலுவலகங்களில் சென்று சரிபார்க்கவும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நில ஆவணங்களின் பதிவுகள் குறித்து, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலுள்ள நில உடமைதாரர்களின் பதிவேடுகள் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

நில உடமை தொடர்பான அனைத்து திருத்தப்பணிகளும் வரும் ஜூன் 30-க்குள் முடிக்கப்பட்டு, அனைத்து ஆவனங்களும் செப்டம்பர் இறுதிக்குள் இணையவழி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் மணிசேகரன், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வசந்தாமணி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.