Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விரைவில் "அம்மா' உணவகம்

Print PDF
தினமணி               06.05.2013

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விரைவில் "அம்மா' உணவகம்


சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3000 சதுர அடியில் "அம்மா' உணவகம் அமைப்பதற்கான நடவடிக்கையை மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நாள்தோறும் 15 ஆயிரம் புறநோயாளிகள் மற்றும் 3000 உள்நோயாளிகள் சிகிச்சைப் பெறுகின்றனர்.

இவர்களை நலம் விசாரிப்பதற்காக பல ஆயிரக்கணக்கில் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனைகளுக்கு வந்து செல்கின்றனர்.

முதல்வர் அனுமதி: அரசு மருத்துவமனைகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால் "அம்மா' உணவகம் திறக்கப்படுமா என்று சில வாரங்களுக்கு முன்பு "தினமணி' நாளிதழில் செய்தி வெளியானது. இதனைத் தொடரந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனை வளாகத்தில் "அம்மா' உணவகம் அமைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டது.

இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் "அம்மா' உணவகம் அமைப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. "அம்மா' உணவகத்துக்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு மாநகராட்சி அதிகாரிகளின் ஆய்வுக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

3000 சதுர அடியில் உணவகம்: இது குறித்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் வே.கனகசபை கூறியது:

ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு பல ஆயிரக்கணக்கில் நோயாளிகளும், பொது மக்களும் வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக "அம்மா' உணவகம் இங்கு திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்லும் இடம் என்பதால் பெரிய அளவில் அமைப்பதற்காக 3000 சதுர அடி இடம், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையத்துக்கு எதிரில் ஒதுக்கப்பட்டுள்ளது.

விரைவில் அங்கு "அம்மா' உணவகம் அமைப்பதற்கான முயற்சியில் மருத்துவமனை நிர்வாகமும், மாநகராட்சியும் ஈடுபட்டுள்ளோம்.

கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஆங்காங்கே பார்வையாளர்கள் கூடத்தில் பார்சல் விற்பனை செய்வதற்கும் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

ஆவின் பாலகம் அமைக்கப்படுமா? ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக ஒரு தனியார் கேன்டீனும், மருத்துவ மாணவர்களுக்காக கேன்டீன் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

இங்கு இருக்கும் கேன்டீன்கள் அனைத்தும் தனியார் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.

அதனால், நோயாளிகள், பொது மக்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் வசதிக்காக ஆவின் பாலகம் அமைந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.