Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலம் செவ்வாய்பேட்டை சுடுகாட்டில் ரூ.1¼ கோடி செலவில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி மேயர் சவுண்டப்பன் தொடங்கி வைத்தார்

Print PDF
தினத்தந்தி         15.05.2013
 
சேலம் செவ்வாய்பேட்டை சுடுகாட்டில் ரூ.1¼ கோடி செலவில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி மேயர் சவுண்டப்பன் தொடங்கி வைத்தார்


சேலம் செவ்வாய்பேட்டை சுடுகாட்டில் ரூ.1¼ கோடி செலவில் அமைக்கப்பட உள்ள எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியினை மேயர் சவுண்டப்பன்  தொடங்கி வைத்தார்.

எரிவாயு தகனமேடை


சேலம் மாநகரில் சுற்றுப்புற சூழலை கருத்தில் கொண்டும், மக்கள் தொகை அதிகரிப்பை கருத்தில் கொண்டும் சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள சுடுகாடுகளில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

ஏற்கனவே, சேலம் ஜான்சன்பேட்டை இடுகாட்டில் தனியார் பங்களிப்புடன் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் ரோட்டரி கிளப் சார்பில் சேலம் மெய்யனூர் சுடுகாட்டில் ரூ.3½ கோடி செலவில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும்பணி நடந்து வருகிறது.

ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில்..

இந்த நிலையில் உட்கட்டமைப்பு இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதியின் கீழ் ரூ.1 கோடியே 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சேலம் செவ்வாய்பேட்டை சந்தைப்பேட்டை சுடுகாட்டில் நவீன இருமேடைகளுடன் கூடிய எரிவாயு தகனமேடை அமைப்பதற்கு சேலம் மாநகராட்சியில் கடந்த 2012–ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு, நேற்று பூமிபூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிக்கான பூமிபூஜையை மேயர் சவுண்டப்பன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் எம்.அசோகன், துணை மேயர் நடேசன், செயற்பொறியாளர்கள் காமராஜ், அசோகன், உதவி செயற்பொறியாளர் மோகன், உதவி ஆணையாளர் ரமேஷ்பாபு, உதவி பொறியாளர் சுமதி, வார்டு கவுன்சிலர்கள் மார்கபந்து, பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

6 மாதத்தில் பணி நிறைவு

இது குறித்து மேயர் எஸ்.சவுண்டப்பன் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘சேலம் மாநகரில் 5 இடங்களில் மயானம் உள்ளது. மக்கள்தொகை பெருகிவரும் சூழ்நிலையில் சுகாதாரத்தையும் சுற்றுப்புறத்தையும் பேணி காக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது செவ்வாய்பேட்டையில் ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும்பணி இன்னும் 6 மாத காலத்தில் முடிவடையும். மேலும் விரைவில் சேலம் அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய சுடுகாட்டிலும் நவீன எரிவாயு தகனமேடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது‘‘ என்றார்.