Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"ஜூனில் அம்மா உணவகம் செயல்படத் தொடங்கும்'

Print PDF
தினமணி         22.05.2013

"ஜூனில் அம்மா உணவகம் செயல்படத் தொடங்கும்'


ஜூன் முதல் வாரத்தில் அம்மா உணவகம் செயல்படத் தொடங்கும் என மேயர் அ.விசாலாட்சி கூறினார்.

அம்மா உணவகம் அமைக்கும் திட்டத்தின்கீழ், திருப்பூர் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சென்னை அம்மா உணவகத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக அவர்கள் செவ்வாய்க்கிழமை சென்னை புறப்பட்டுச் சென்றனர்.

திருப்பூரில் 10 இடங்களில் அம்மா உணவகம் அமைப்பதற்காக மாநகராட்சி சார்பில் புதிதாகக் கட்டடம் கட்டும் பணி நடைபெறுகிறது. இந் நிலையில், அம்மா உணவகங்களில் உணவு தயாரிக்கும் பொறுப்பு மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. 10 மகளிர் உதவிக் குழுக்களில் இருந்து தலா இருவர் வீதம் தேர்வுசெய்யப்பட்டு, அவர்களுக்கு முதல் கட்டமாக மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

நகர்நல அலுவலர் ஆர்.செல்வக்குமார் தலைமையில் சமையல் கலை நிபுணர்கள் இருவர் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பயிற்சி அளித்தனர்.

இதுகுறித்து மேயர் அ.விசாலாட்சி கூறியது: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை நேரில் சென்று பார்த்து, அங்கு பயிற்சி பெறும் வகையில் இந்த மகளிர் குழுக்களைச் சேர்ந்த 20 பேர் சென்னைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

அங்கிருந்து வந்தபின் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு உணவு தயாரிப்பது குறித்து சமையல்கலை நிபுணர்கள் மூலமாக 5 நாள்களுக்கு செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். அம்மா உணவகத்தில் ரூ.1-க்கு ஒரு இட்லி, சாம்பார், ரூ.3-க்கு தயிர்சாதம், ரூ.5-க்கு சாம்பார் சாதம் விற்பனை செய்யப்படும். 7 நாளைக்கு 7 விதமாக சாம்பார் தயாரித்து வழங்கப்படும். வரும் ஜூன் முதல் வாரத்தில் அம்மா உணவகம் செயல்படத் தொடங்கும் என்றார்.