Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூரில், அம்மா உணவகங்கள்: மகளிர் சுய உதவிக்குழுவினர் நேரடி பயிற்சிக்காக சென்னை பயணம் அதிகாரி தகவல்

Print PDF
தினத்தந்தி       22.05.2013

வேலூரில், அம்மா உணவகங்கள்: மகளிர் சுய உதவிக்குழுவினர் நேரடி பயிற்சிக்காக சென்னை பயணம் அதிகாரி தகவல்

வேலூரில் அம்மா உணவகங்களில் சமையல் பணியில் ஈடுபட இருக்கும் மகளிர் சுய உதவிக்குழுவினர் நேரடியாக பயிற்சி பெற சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர் என்று கமிஷனர் ஜானகி தெரிவித்தார்.

மலிவு விலை உணவகங்கள்

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மலிவு விலையில் சாப்பிடும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும், அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அந்த உணவகங்களில் காலை உணவாக இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், மதிய உணவாக சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் வேலூர், மதுரை, திருச்சி உள்பட 9 மாநகராட்சிகளிலும் விரிவுப்படுத்தப்படும் எனவும், ஒவ்வொரு மாநகராட்சியிலும் முதல் கட்டமாக தலா 10 உணவகங்கள் திறக்கப்படும் எனவும் அரசு அறிவித்தது.

இடங்கள் தேர்வு

அதன்படி வேலூர் மாநகராட்சியில் மலிவு விலை அம்மா உணவகங்கள் அமைக்க காட்பாடி காந்திநகர், தாராபடவேடு, சத்துவாச்சாரி பீடி தொழிலாளர் குடியிருப்பு, அலமேலுமங்காபுரம் வெங்கடாபுரம் ரோடு, கலெக்டர் அலுவலகம் ஆஞ்சநேயர் கோவில் அருகில், விருபாட்சிபுரம், பாகாயம் மாநகராட்சி பள்ளி அருகில், சலவன்பேட்டை மார்க்கெட் பள்ளி அருகில், கஸ்பா நெடுந்தெரு, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் ஆகிய 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆலோசனைக்கூட்டம்

மேற்கண்ட 10 இடங்களிலும் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்றுகாலை மாநகராட்சியில் மேயர் கார்த்தியாயினி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கமிஷனர் ஜானகி, துணை மேயர் தருமலிங்கம், என்ஜினீயர் தேவகுமார், நகர் நல அலுவலர் பிரியம்வதா, நகரமைப்பு அலுவலர் கண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் கமிஷனர் கூறியதாவது:–

தேர்வு செய்யப்பட்ட 10 இடங்களில் 4 இடங்களில் கட்டிட வசதி உள்ளது. அங்கு சிறு, சிறு வேலைகள் மட்டும் செய்யவேண்டியது உள்ளது. மீதம் உள்ள 6 இடங்களில் புதிகாக கட்டிடம் கட்டும் பணி தொடங்கி தொய்வின்றி நடைபெற்றுவருகிறது. அனைத்து உணவகங்களிலும் கை கழுவும் இடம், டோக்கன் பெறும் இடம், சாப்பாட்டு அறை, சமையலறை, பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் வசதிகளும் செய்து தரப்பட உள்ளது. அனைத்து உணவகங்களும் மாநகராட்சி நகர் நல அலுவலகம் கட்டுப்பாட்டில் இயங்கும்.

சென்னைக்கு நேரடி பயிற்சி

சென்னையில் நடைபெறும் உணவகங்களில் உணவு தயாரிக்கப்படும் முறைகளை நானும் (கமிஷனர்) மற்றும் அலுவலர்களும் நேரில் பார்வையிட்டு வந்துள்ளோம்.

உணவகங்களில் சமையல் பணியில் நேரடியாக ஈடுபட இருக்கும் மகளிர் சுய உதவிக்குழுவினர் சுகாதார அதிகாரி பிரியம்வதா தலைமையில் சென்னையில் இயங்கும் அம்மா உணவகங்களை நேரில் பார்வையிட்டு, பயிற்சி பெறுவதற்காக விரைவில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இவ்வாறு கமிஷனர் ஜானகி கூறினார்.