Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அம்மா உணவகம், நேரடி பயிற்சிக்கு சென்னை சென்ற மகளிர் சுயஉதவி குழுவினர், அலுவலர்கள் உணவை ருசி பார்த்தனர்

Print PDF
தினத்தந்தி       24.05.2013

அம்மா உணவகம், நேரடி பயிற்சிக்கு சென்னை சென்ற மகளிர் சுயஉதவி குழுவினர், அலுவலர்கள் உணவை ருசி பார்த்தனர்
 


சென்னையில் நடைபெறும், அம்மா உணவகத்தில் நேரடி பயிற்சி பெற சென்ற மகளிர் சுய உதவிக்குழுவினரும், அலுவலர்களும் அங்கு காலை, பகல் உணவை சாப்பிட்டு ருசி பார்த்து விட்டு வேலுர் திரும்பினார்கள்.

அம்மா உணவகங்கள்

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மலிவு விலையில் சாப்பிடும் வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும், அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

அந்த உணவகங்களில் காலை உணவாக இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், மதிய உணவாக சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டம் வேலூர், மதுரை, திருச்சி உள்பட 9 மாநகராட்சிகளிலும் விரிவுபடுத்தப்படும் எனவும், ஒவ்வொரு மாநகராட்சியிலும் முதல் கட்டமாக தலா 10 உணவகங்கள் திறக்கப்படும் எனவும் அரசு அறிவித்தது.

140 பேர்


அதன்படி வேலூர் மாநகராட்சியில் மலிவு விலை அம்மா உணவகங்கள் அமைக்க 10 இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் 4 இடங்களில் கட்டிட வசதி உள்ளது. மீதம் உள்ள 6 இடங்களில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடைபெறுகிறது.

10 அம்மா உணவகங்களிலும் சமையல் மற்றும் அது தொடர்பான பணிகளை செய்ய மகளிர் சுய உதவி குழுவினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதாவது ஒரு உணவகத்திற்கு 14 பேர் வீதம் மொத்தம் 140 பேர் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அது தவிர நிர்வாகப்பணியில் மாநகராட்சி வருவாய் ஆய்வாளர்களும், துப்புரவு ஆய்வாளர்களும் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நேரடி பயிற்சிக்கு...

சென்னையில் நடைபெறும் அம்மா உணவகங்கள் எப்படி இயங்குகிறது, காலை எத்தனை மணிக்கு உணவு தயாரிக்க தொடங்க வேண்டும், சாம்பார் சாதம். தயிர் சாதம் ருசியாக தயாரிக்கும் முறை எப்படி? என்பதையும், நிர்வாக தரப்பில் என்னென்ன பணிகள் இருக்கிறது என்பதை நேரடியாக சென்னை சென்று அங்கு முகாமிட்டு பயிற்சி பெற அந்த பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு கமிஷனர் ஜானகி உத்தரவிட்டார்.

அதன்படி வேலூர் மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் சிவக்குமார், லூர்துசாமி, பாலமுருகன் மற்றும் வருவாய் அலுவலர்கள் குமரவேல், மூர்த்தி, பாலசந்தர், கணேஷ்வரன் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவை சேர்ந்த 20 பெண்கள் நேற்று முன்தினம் இரவு வேலூரில் இருந்து தனி வேன் மூலம் புறப்பட்டு சென்னை சென்றனர். சென்னை அம்பத்தூருக்கு காலையில் சென்ற அவர்கள் அங்கு செயல்படும் 2 உணவகங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டனர்.

சாப்பிட்டு ருசி பார்த்தனர்

துப்புரவு ஆய்வாளர்கள் அங்கு பராமரிக்கப்படும் சுகாதாரம், உணவின் தரம், அளவு போன்றவற்றை யும், வருகைப் பதிவேடு மற்றும் பணிகளையும், வருவாய் ஆய்வாளர்கள் காலை, பகல் உணவுக்கு அன்றாடம் என்னென்ன காய்கறிகள், பொருட்கள் வாங்க வேண்டும் என்பதையும் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டனர்.

அதுபோல மகளிர் சுயஉதவி குழுவினர் காலை டிபன் மற்றும் பகலில் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றை ருசியாக தயாரிப்பது எப்படி? என்பதை நேரடியாக பார்த்ததுடன் அதுபற்றி குறிப்பெடுத்துக் கொண்டனர்.

அதுகுறித்து துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் கூறும்போது, வேலூரில் இருந்து சென்ற அனைவரும் காலை டிபன், பகல் உணவை அம்மா உணவகத்திலேயே சாப்பிட்டோம், ருசியாக இருந்தது எனக்கூறினார்.

வேலூரில் அம்மா உணவகங்கள் சுகாதாரத்துறையின்கீழ்தான் செயல்பட உள்ளது அந்த துறையின் பொறுப்பாளராக உள்ள நகர் நல அலுவலர் பிரியம்வதா மற்றும் அலுவலர்கள் விரைவில் அம்மா உணவகங்களை பார்வையிட சென்னை செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.