Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடைகளை செயல்படுத்த முயற்சி செய்யாததால்... ஹம்மிங்வே வணிக வளாகத்தில் அம்மா உணவகம்

Print PDF
தினமலர்                 24.05.2013

கடைகளை செயல்படுத்த முயற்சி செய்யாததால்... ஹம்மிங்வே வணிக வளாகத்தில் அம்மா உணவகம்


ஈரோடு: மரப்பாலம் பகுதியில் மீன் வியாபாரிகளுக்காக கட்டப்பட்ட ஹம்மிங்வே வணிக வளாகம், கடந்த ஆட்சியில் குடியிருப்பாகவும், தற்போது அம்மா உணவகமாக மாற்றப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாயை அதிகாரிகள் அழித்துள்ளனர்.

ஈரோடு மாநகராட்சியில் ஈ.வி.என்.,ரோடு ஸ்டோனி பிரிட்ஜ் பகுதியில், 10க்கும் மேற்பட்ட ரோட்டோர மீன்கடைகள் உள்ளன. வியாழன், ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக ரோட்டினை ஆக்ரமித்து மீன்கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர்.

மாலையில் மீன்கடைகளின் கழிவுகளை ஒட்டுமொத்தமாக ஸ்டோனி பிரிட்ஜ் பெரும்பள்ளம் ஓடையில் கொட்டுகின்றனர். தேங்கும் மீன் கழிவுகளால் ஓடையை ஒட்டிய பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் கடும் துர்நாற்றம் அடிக்கிறது.

பொதுமக்களுக்கு சுகாதாரமான இறைச்சி வழங்கிடும் நோக்கில், மீன்கடைகளுக்கு என தனி மார்க்கெட் ஏற்படுத்த, கடந்த தி.மு.க., ஆட்சியில் மரப்பாலம் பகுதியில் ஹம்மிங்வே வணிக வளாகம் கட்டப்பட்டது. முன்புறம் வணிக வளாக கடைகளும், பின்புறம் மீன் கடைகள் வைக்க கட்டப்பட்டது.

ஸ்டேனி பிரிட்ஜ் பகுதியில் இருந்த மீன்கடைக்காரர்கள், ஹம்மிங்வே வணிக வளாகத்துக்கு இடம் பெயர மறுத்ததால், இவ்வளாகம் திறக்கப்படாமல் கிடந்தது.

இதனிடையே மாநகராட்சி துப்புறவு தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி வீடு கட்டும் வரையில் மீன்கடைகளை இணைத்து கட்டி, வீடாக மாற்றி குடியிருந்து வந்தனர்.

அவர்களுக்கம் தனியாக வீடுகள் கட்டி திறக்கப்பட்டதால், இவ்விடத்தை அவர்கள் காலி செய்தனர். இதனை அடுத்து மீன் மார்க்கெட் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீன் மார்க்கெட்டுக்காக கட்டிய கட்டிடத்தை ஒன்றாக இணைக்கும் வகையில் தடுப்பு சுவர்கள் இடிக்கப்பட்டது.
ஈரோடு மாநகராட்சியில், 10 இடங்களில் ஏற்படுத்த உள்ள அம்மா உணவக திட்டத்தில், மரப்பாலம் பகுதியில், ஹம்மிங்வே வணிக வளாகம் தேர்வு செய்யப்பட்டு, உணவகம் அமைக்க கட்டிடம் மாற்றியமைக்கும் பணி நடக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்களுக்கு சுகாதாரமான மீன் இறைச்சி வழங்கவும், கழிவுகள் ஓடையில் கொட்டுவதை தடுக்க, மரப்பாலம் பகுதியில் ஹம்மிங்வே மீன்கடைகள் கட்டப்பட்டது. 15 கடைகள் வைக்கவும், கட்டப்பட்ட கடைகள் குடியிருப்பாகவும், தற்போது உணவகமாக மாறி வருகிறது.

கடைகளை திறக்க நடவடிக்கை எடுத்திருந்தால், மாநகராட்சிக்கு வாடகை, முன்செலுத்து தொகை என பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும். மூன்றாண்டுகள் திறக்காமல் கிடப்பில் போட்டு, தற்போது முழுமையாக வீணடித்துள்ளனர்.

ஸ்டோனி பிரிட்ஜ் பகுதியில் உள்ள மீன்கடைகளுக்கு இனி விமோச்சனம் கிடைக்க வாய்ப்பில்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.