Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூரில் அமையவிருக்கும் 10 அம்மா உணவகங்களில் வருகிற 1–ந் தேதி முதல் உணவு வழங்கப்படும் அதிகாரி தகவல்

Print PDF
தினத்தந்தி        25.05.2013

வேலூரில் அமையவிருக்கும் 10 அம்மா உணவகங்களில் வருகிற 1–ந் தேதி முதல் உணவு வழங்கப்படும் அதிகாரி தகவல்

வேலூர் மாநகராட்சியில் 10 இடங்களில் தொடங்கப்பட உள்ள மலிவு விலை அம்மா உணவகங்களில் வருகிற 1–ந் தேதி முதல் உணவு வழங்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.

அம்மா உணவகம்

மலிவு விலை அம்மா உணவகங்கள் சென்னையில் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து தமிழ்நாட்டில் இதர 9 நகராட்சிகளுக்கும் இத்திட்டம் விரிவு படுத்தப்படும் என்றும், அங்கு முதற்கட்டமாக தலா 10 உணவகங்கள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

மும்முரம்

அதைத்தொடர்ந்து வேலூர் மாநகராட்சி பகுதியில் 10 இடம் தேர்வு செய்யப்பட்டது. அதில் 4 இடங்களில் ஏற்கனவே கட்டிட வசதியுள்ளது. மீதம் உள்ள 6 இடங்களில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே அமைய உள்ள அம்மா உணவகத்திற்கு மேற்கூரை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

இதற்கிடையே அம்மா உணவகங்களில் பணியாற்ற 140 மகளிர் சுய உதவிக்குழுவினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதுபோல நிர்வாக பணிக்காக துப்புரவு ஆய்வாளர்களும், வருவாய் ஆய்வாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சமையல் பயிற்சி

அவர்களில் சுமார் 28 பேர் சென்னை அம்பத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு செயல்படும் அம்மா உணவகத்தில் பயிற்சி பெற்று திரும்பினார்கள்.

அத்துடன் தேர்வு செய்யப்பட்டுள்ள 140 பேருக்கும் நேற்று முன்தினம் வேலூர் திருமண மண்டபத்தில் சமையல் கலை நிபுணர் மூலம் இட்லி, சாம்பார், சாம்பார் சாதம், தயிர் சாதம் தயாரிக்க நேரடி பயிற்சி மேயர் கார்த்தியாயினி தலைமையில் அளிக்கப்பட்டது.

1–ந்தேதி முதல்


அம்மா உணவகங்கள் எப்போது திறக்கப்படும் என்று அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

வருகிற 30 அல்லது 31–ந் தேதி அனைத்து மாநகராட்சிகளிலும் அமைக்கப்பட்டுள்ள 90 அம்மா உணவகங்களும் சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கப்பட உள்ளது. அதுபோல 1–ந் தேதி முதல் அனைத்து உணவகங்களிலும் உணவு வழங்கப்படும்.

வேலூரைப் பொருத்தவரை 4 உணவகங்களுக்கு கட்டிடப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. ஒருவேளை அந்த கட்டிடப் பணிகள் முடிய தாமதம் ஆனாலும் கூட அருகாமையில் உள்ள வேறு உணவகங்களில் இட்லி, சாம்பார், சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவைகளை தயாரித்து கட்டிடப்பணிகள் நிறைவு பெறாத இடத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு வினியோகிக்கப்படும்.

மொத்தத்தில் வருகிற 1–ந்தேதி வேலூரில் 10 உணவகங்களிலும் காலை டிபன் மற்றும் பகலில் சாதமும் வழங்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

முன்னாள் அமைச்சர்

வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே கட்டப்படும் அம்மா உணவக கட்டிடப்பணியை நேற்று முன்னாள் அமைச்சர் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரிடம் நகரமைப்பு அலுவலர் கண்ணன் கட்டிடப்பணிகள் குறித்து விளக்கி கூறினார்.