Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"அம்மா' உணவகங்களில் பொங்கலுக்கு வரவேற்பு :விரைவில் விற்பனையை துவக்க மக்கள் விருப்பம்

Print PDF
தினமலர்          25.05.2013

"அம்மா' உணவகங்களில் பொங்கலுக்கு வரவேற்பு :விரைவில் விற்பனையை துவக்க மக்கள் விருப்பம்


சென்னை : "அம்மா உணவகங்களில் பொங்கல், கருவேப்பிலை, எலுமிச்சை சாத விற்பனையை விரைவில் துவக்க வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.சென்னை மாநகராட்சி நடத்தி வரும், "அம்மா' உணவகங்களில், தினமும் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக, பொங்கல், கருவேப்பிலை, எலுமிச்சை சாதமும் வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்தார். இதற்காக, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, மலிவு விலை உணவகங்களில் நேற்று, சோதனை ரீதியாக மகளிர் சுய உதவிக்குழுவினர் பொங்கல் தயாரித்தனர்.

ஒரு கிலோ அரிசி, 250 கிராம் சிறு பருப்பு, மிளகு கொண்டு தயாரான பொங்கலை, பொறுப்பாளர் மற்றும் குழுவினர் ருசி பார்த்து, தரத்தை உறுதி செய்தனர். பின், இட்லி வாங்க வந்தவர்களுக்கு, சிறிதளவு பொங்கலைக் கொடுத்து, கருத்து கேட்டனர்."பொங்கல் நன்றாக இருக்கிறது; எப்போது விற்பனைக்கு தருவீர்கள்' என, பலரும் ஆர்வமுடன் கேட்டனர். இதுபற்றிய அறிவிப்பு வரும் என, கூறி சமாளித்தனர்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "பயிற்சி பெற்ற மகளிர், ஆர்வ மிகுதியில் பொங்கல் தயாரித்து பார்த்துள்ளனர். முதல்வர் அறிவிக்கும் நாளில், பொங்கல், கருவேப்பிலை, எலுமிச்சை சாதம் விற்பனை துவங்கும். அதற்கு ஓரிரு நாள் முன், முறைப்படியாக, சோதனை ரீதியான தயாரிப்பை துவங்குவோம்' என்றனர்.ஒரே நாளில், சாம்பார் சாதம், தயிர் சாதம், கருவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் என, எல்லாம் கிடைக்குமா என, கேட்டபோது, "தயிர் சாதம் தினமும் இருக்கும். மற்றவை தினமும் ஒன்று என்ற வகையில் கிடைக்கும்' என, அதிகாரிகள் கூறினர்.