Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அம்மா உணவகம்: திருப்பூருக்கு ரூ.2.71 கோடி கூடுதல் செலவு

Print PDF
தினமணி        29.05.2013

அம்மா உணவகம்: திருப்பூருக்கு ரூ.2.71 கோடி கூடுதல் செலவு


திருப்பூர் மாநகராட்சி சார்பில் 10 இடங்களில் மலிவு விலையில் உணவு வழங்கக் கூடிய அம்மா உணவகம் திட்டத்துக்கு ஆண்டுதோறும் ரூ.2.71 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் 15 வேலம்பாளையம் மண்டல அலுவலக வளாகம், கொங்கு பிரதான சாலை சாமியம்மாள் பள்ளி அருகிலும், பழைய பேருந்து நிலையம், குமரன் வணிக வளாகம், நல்லூர் மண்டல அலுவலக வளாகம், பாண்டியன் நகர், சந்திராபுரம், ஆத்துப்பாளையம், தென்னம்பாளையம் வாரச்சந்தைப் பகுதி, எ.வி.பி. சாலை என 10 இடங்களில் அம்மா உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன.

அம்மா உணவகத்தில் இட்லி ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3-க்கு வழங்கப்படும். ஒரு உணவகத்தில் 300 பேருக்கு இந்த வகை உணவு வழங்கப்படும். ஒரு இட்லி, சாம்பாருக்கான செலவு ரூ.3.64; இதற்கான பற்றாக்குறை ரூ.2.64., ஒரு சாம்பார் சாதத்துக்கான செலவு ரூ.14.73; இதற்கான பற்றாக்குறை ரூ.9.73. ஒரு தயிர் சாதத்துக்கான செலவு ரூ.7.44; இதற்கான பற்றாக்குறை ரூ.4.44.

ஒரு அம்மா உணவகத்தில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 300 பேருக்கு 1,200 இட்லி, 300 சாம்பார் சாதம், 300 தயிர் சாதம் வழங்கப்படும். இதன்மூலமாக ஒரு உணவகத்துக்கு ஒரு நாளைக்கு ஏற்படும் பற்றாக்குறை ரூ.7,149; மாதத்திற்கு ரூ.2.22 லட்சம்; ஆண்டுக்கு ரூ.27.07 லட்சம். அதன்படி, 10 உணவகங்களுக்கு ஆண்டுக்கு ஏற்படும் பற்றாக்குறை ரூ.2.71 கோடி.

ஓராண்டுக்கு தேவையான பொருள்கள்:    10 உணவகங்களுக்கு ஒரு ஆண்டுக்கு 200 டன் புழுங்கல் அரிசி, 91 டன் பச்சரிசி, 21 டன் உளுந்து, 67 டன் துவரம் பருப்பு, 18.25 டன் சமையல் எண்ணெய், 2.190 டன் வெந்தயம், 1.095 டன் பூண்டு, 2.920 டன் மிளகாய், 5 டன் புளி, 1 டன் மஞ்சள் பொடி, 4 டன் கடுகு, 4.5 டன் மசாலா, 0.45 டன் பெருங்காயம், 63 டன் வெங்காயம், 78 டன் தக்காளி, 45 டன் தயிர், 3,650 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (தலா 19 கி.கி.).

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வேலை: அம்மா உணவகங்களில் உணவு தயாரித்து, விநியோகம் செய்வதற்கு மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 12 பேர் வீதம் 10 உணவகங்களுக்கு 120 பேருக்கு வேலை அளிக்கப்படும். அவர்களுக்கு ஒரு நாளைக்கு தலா ரூ.250 வீதம் சம்பளம் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்துக்கான மேற்கண்ட செலவுகள் உள்ளிட்ட அனுமதிக்கு வெள்ளிக்கிழமை (மே 31) நடைபெற இருக்கும் மாநகராட்சிக் கூட்டத்தில் மன்ற ஒப்புதலுக்கு தீர்மானங்கள் கொண்டுவரப்பட உள்ளன.