Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லையில் அம்மா உணவகத்தில் சோதனை முறையில் உணவு தயாரிப்பு: மக்களுக்கு இலவசமாக விநியோகம்

Print PDF
தினமணி         30.05.2013

நெல்லையில் அம்மா உணவகத்தில்  சோதனை முறையில் உணவு தயாரிப்பு:  மக்களுக்கு இலவசமாக விநியோகம்


மேலப்பாளையத்தில் அம்மா மலிவு விலை உணவகத்தில் புதன்கிழமை சோதனை முறையில் உணவு தயாரிக்கப்பட்டு, மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டது.

 திருநெல்வேலி மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா மலிவு விலை உணவகங்கள் அமைக்கப்படுகின்றன. இதை முதல்வர்

 ஜெயலலிதா ஜூன் முதல் வாரத்தில் விடியோ கான்பரன்சிங் மூலம் திறந்துவைக்கிறார்.

 இதையொட்டி உணவகப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுகின்றன. உணவகங்கள் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. இதற்காக மகளிர் குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஓர் உணவகத்துக்கு 12 பேர் வீதம் 120 பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

 இதில் மேலப்பாளையம் மண்டல அலுவலக வளாகம், தச்சநல்லூர் அலகு அலுவலக வளாகம் ஆகிய 2 இடங்களிலும் உணவகப் பணிகள் முடிந்துள்ளன. இதையடுத்து இங்கு சோதனை முறையில் உணவு தயாரித்து மக்களுக்கு இலவசமாக வழங்க மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.

 சோதனை முறை: மேலப்பாளையம் அம்மா உணவகத்தில் புதன்கிழமை உணவு தயாரிக்கப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டது.

 காலையில் 300 பேர் சாப்பிடும் வகையில் 1,200 இட்லிகளும், மதியம் 300 சாம்பார் சாதங்களும், 300 தயிர் சாதங்களும் தயாரிக்கப்பட்டன.

 மேயர் விஜிலா சத்தியானந்த், துணை மேயர் பூ. ஜெகநாதன், மண்டலத் தலைவர்கள் ஹைதர் அலி (மேலப்பாளையம்), மாதவன் (தச்சநல்லூர்), ஆணையர் த. மோகன், மாநகராட்சி அதிகாரிகள் உணவை ருசித்தனர்.
 உணவு நட்சத்திர ஹோட்டல் தரத்துடன் இருப்பதாக மக்கள் பாராட்டினர். சுவை, தரம் நீடிக்க வேண்டும் என அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

 தச்சநல்லூர் உணவகத்தில் வியாழக்கிழமை சோதனை முறையில் உணவு தயாரிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

 இதுகுறித்து மேயர் கூறியதாவது: மேலப்பாளையம், தச்சநல்லூரில் தலா ஓர் உணவகப் பணிகள் முடிந்துவிட்டன. வெள்ளிக்கிழமைக்குள் (மே 31) 6 உணவகங்கள் தயாராகிவிடும். 4 இடங்களில் மட்டும் தாற்காலிகமாக உணவகம் செயல்படும். அவையும் ஒரு மாதத்துக்குள் தயாராகிவிடும்.

 உணவகங்கள் காலை 7 முதல் மாலை 4 மணி வரை செயல்படும். இட்லி ரூ. ஒன்றுக்கும், சாம்பார் சாதம் ரூ. 5-க்கும், தயிர் சாதம் ரூ. 3-க்கும் விற்கப்படும்.

 உணவுகளை சரியான நேரத்தில் தயாரித்து, விநியோகிப்பது தொடர்பாக மேலப்பாளையத்தில் புதன்கிழமை சோதனை ஓட்டம் நடைபெற்றது. உணவகங்களை முதல்வர் ஜூன் முதல் வாரத்தில் திறந்துவைப்பார் என்றார் மேயர்.

 உணவகங்கள் அமையும் இடங்கள்

 1. மேலப்பாளையம் மண்டல அலுவலக வளாகம், 2. மேலப்பாளையம் பழைய அலகு அலுவலக வளாகம் (அரசு மருத்துவமனை எதிர்புறம்), 3. தச்சநல்லூர் அலகு அலுவலக வளாகம், 4. பேட்டை மாநகராட்சி மருத்துவமனை வளாகம், 5. நகரம் தொண்டர் சன்னதி அருகேயுள்ள மருத்துவமனை வளாகம், 6. நகரம் வையாபுரிநகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே, 7. சந்திப்பு கணேசபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளிக் கட்டட வளாகம், 8. பாளை. மனக்காவலம்பிள்ளை மாநகராட்சி மருத்துவமனை வளாகம், 9. பாளை. டாக்டர் அம்பேத்கர் காலனி (மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் அலுவலக புதிய கட்டடம் எதிர்புறம்), 10. பாளை. திம்மராஜபுரம் அலகு அலுவலகம் அருகே.