Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சியில் தயார் நிலையில் அம்மா உணவகங்கள் சோதனை அடிப்படையில் உணவு தயாரிக்கும் பணி தொடங்கியது

Print PDF
தினத்தந்தி       30.05.2013

திருச்சியில் தயார் நிலையில் அம்மா உணவகங்கள் சோதனை அடிப்படையில் உணவு தயாரிக்கும் பணி தொடங்கியது


திருச்சி மாநகராட்சியில் அம்மா உணவகங்களில் சோதனை அடிப்படையில் உணவு தயாரிக்கும் பணி தொடங்கியது.

முதல்–அமைச்சர் உத்தரவு

சென்னையில் மலிவு விலையில் அம்மா உணவகங்கள் மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டது. இந்த உணவகங்களை தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தார். இந்த உணவகங்களில் இட்லி, தயிர் சாதம், சாம்பார் சாதம் ஆகியவை மலிவு விலையில் விற்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அம்மா உணவகம் அமோக வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாநகராட்சியில் தலா 10 இடங்களில் அம்மா உணவகங்களை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்பேரில், திருச்சி மாநகராட்சியில் 4 கோட்டங்களிலும் அம்மா உணவகங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது.

அம்மா உணவகங்கள்

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கீழ் தளத்திலும், கோ–அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்திலும், மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகிலும், ஜங்ஷன் வழிவிடுவேல் முருகன்கோவில் அருகிலும் என மொத்தம் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் தயார் நிலையில் உள்ளன. அம்மா உணவகங்களை மாநகராட்சி மேயர் ஜெயா, கமிஷனர் தண்டபாணி ஆகியோர் பார்வையிட்டனர்.

ஸ்ரீரங்கம் கோட்டத்தில்...

இந்தநிலையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று(வியாழக்கிழமை) ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகிறார். இதனையொட்டி ஸ்ரீரங்கம் கோட்டத்தில் அம்மா உணவகம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. பெரியவர்கள், குழந்தைகள் சாப்பிடும் வகையிலும், திண்டு அமைக்கப்பட்டு உள்ளது.

நேற்று பகல் சோதனை அடிப்படையில் உணவு தயாரிக்கும் பணி நடந்தது. இந்த பணிகளை ஸ்ரீரங்கம் கோட்ட உதவி கமிஷனர் ரெங்கராஜன், உதவி செயற்பொறியாளர் அமுதவள்ளி, உதவி வருவாய் அலுவலர் சண்முகம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.