Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மலிவு விலை உணவகத்தில் சோதனை முறையில் உணவு தயாரிப்பு ஓரிரு நாளில் திறக்க முடிவு

Print PDF
தினகரன்                 31.05.2013

மலிவு விலை உணவகத்தில் சோதனை முறையில் உணவு தயாரிப்பு ஓரிரு நாளில் திறக்க முடிவு


ஈரோடு,  :  ஈரோடு மாநகராட்சி பகுதியில் அமையவுள்ள மலிவு விலை உணவகத்தில் சோதனை முறையில் நேற்று உணவு தயாரிப்பு பணி நடந்தது. இன்னும் ஓரிரு நாளில் உணவத்தை திறக்க முடிவு செய்துள்ளனர்.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஆர்.என்.புதூர், கொல்லம்பாளையம், சூளை, காந்திஜிரோடு, வ.உ.சி.பூங்கா, பெரியஅக்ரஹாரம், மரப்பாலம், கருங்கல்பாளையம், பஸ் ஸ்டேண்ட், சூரம்பட்டி ஆகிய 10 இடங்களில் மலிவு விலை உணவகம் திறக்கப்படவுள்ளது. இதில் முதல்கட்டமாக ஆர்.என்.புதூர், சூளை, காந்திஜிரோடு, கொல்லம்பாளையம், ஏ.பி.டி.ரோடு வ.உ.சி.பூங்கா ஆகிய 5 இடங்களில் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்.என்.புதூர், கொல்லம்பாளையம் லோட்டஸ் மருத்துவமனை அருகில் மலிவு விலை உணவங்கள் இன்னும் ஓரிரு நாளில் திறக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது உணவுகளுக்கான தயாரிப்பு செலவு மட்டும் 2 கோடியே 4 லட்ச ரூபாயாகவும், இதில் விற்பனை மூலம் பெறப்படும் வருவாய் ரூ.65.70 லட்சமாகவும், பற்றாக்குறையாக ஒருகோடியே 38 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை மாநகராட்சி பொது நிதியில் இருந்து பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடம் இல்லாத பகுதிகளில் 5 புதிய கட்டிடங்கள் கட்டப்படவுள்ளது. இதற்காக ஒரு கட்டிடத்திற்கு 20 லட்ச ரூபாய் வீதம் ஒருகோடி ரூபாயும், சமையல் பாத்திரங்கள், இதர தளவாட சாமான்கள் வாங்கவும் 60 லட்ச ரூபாய் மாநகராட்சி பொதுநிதியில் இருந்து பயன்படுத்தப்படவுள்ளது.

உணவுகள் தயாரிக்க தேவைப்படும் அரிசியை கிலோ ஒரு ரூபாய்க்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து பெறப்படவுள்ளது.

மிளகாய், புளி, மஞ்சள்தூள், பொட்டுக்கடலை, கடுகு, வெந்தயம் ஆகியவற்றை சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடியில் கொள்முதல் செய்யவும், காய்கறிகள், தேங்காய், தக்காளி மற்றும் வெங்காயத்தை அன்றாடம் வெளிச்சந்தையில் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான சமையல் கேஸ் சிலிண்டர்களை கூட்டுறவு பண்டக சாலை எரிவாயு விற்பனை நிலையத்தில் இருந்து நேரடியாக பெறும் வகையில் நகராட்சி நிர்வாக ஆணையருக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் தொடங்கப்படவுள்ள மலிவு விலை உணவகத்தில் தற்போது ஆர்.என்.புதூர், கொல்லம்பாளையம் லோட்டஸ் மருத்துவமனை அருகில் என 2 இடங்களில் விரைவில் திறக்கப்படவுள்ளது.

இதற்காக சமையல் அறைகள் தயார் நிலையில் உள்ளது. நேற்று சமையல் அறைகளில் பொருத்தப்பட்டுள்ள அடுப்புகளில் உணவுகளை தயாரித்து பார்த்தனர். மேலும் வெளியில் இருந்து மாவு வாங்கி வந்து இட்லி வேக வைத்து சரியாக செயல்படுகிறதா என்பது குறித்தும் சோதனை முறையில் பரிசோதித்து பார்த்தனர். இன்னும் ஓரிரு நாளில் மலிவு விலை உணவகம் திறக்கப்படவுள்ள நிலையில் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.