Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூர் மாநகராட்சியில் 10 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் திறப்பு

Print PDF
தினமணி        03.06.2013

வேலூர் மாநகராட்சியில் 10 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் திறப்பு


வேலூர் மாநகராட்சியில் 10 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் திறக்கப்பட்டன.

   முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமை செயலகத்தில் இருந்து விடியோ கான்ஃபரன்சிங் முறையில் வேலூர் உள்ளிட்ட 9 மாநகராட்சிகளில் மலிவு விலை உணவகங்களை தொடங்கி வைத்தார்.

    இதைத் தொடர்ந்து வேலூர் ஆபிசர்ஸ் லைனில் சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகம் அருகே நிறுவப்பட்டுள்ள மலிவு விலை உணவகத்தில் பிற்படுத்தப்பட்டோர்

நலத்துறை அமைச்சர் அ.முகமது ஜான், ஆட்சியர் பொ.சங்கர், மேயர் பி.கார்த்தியாயினி, சட்டப் பேரவை உறுப்பினர் டாக்டர் வி.எஸ்.விஜய் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

   அதையடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியன மலிவு விலையில் வழங்கப்பட்டன.

   காட்பாடி காந்தி நகரில் டான்போஸ்கோ பள்ளி அருகில், கஸ்பா நெடுந்தெரு, விருபாட்சிபுரம் மாநகராட்சி கடைகள் அருகில், சத்துவாச்சாரி பீடி தொழிலாளர்கள் குடியிருப்பு, தாராபடவேடு பாரதி நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மாநகராட்சி வணிக வளாகம், அலமேலுமங்காபுரத்தில் வெங்கடாபுரம் ரோடு, பாகாயம் மாநகராட்சி பள்ளி அருகில், கொசப்பேட்டை மார்க்கெட் உயர்நிலைப் பள்ளி அருகில் நிறுவப்பட்டுள்ள மலிவு விலை உணவகங்கள் செயல்படத் தொடங்கின.

   இட்லி ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3 விலையில் 10 மலிவு விலை உணவகங்களிலும் வழங்கப்படும். ஒவ்வொரு உணவகத்திலும் தலா 300 சாம்பார் சாதம், தயிர் சாதம், 1200 இட்லி நாள்தோறும் தயாரித்து விற்பனை செய்யப்படும். மக்களின் வரவேற்புக்கு ஏற்ப இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

   இந்த உணவகங்கள் நாள்தோறும் காலை 7 முதல் 10 மணி வரை, நண்பகல் 12 முதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும். உணவக செயல்பாடுகள் நாள்தோறும் கண்காணிக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறினர்.

   விழாவில் துணை மேயர் வி.டி.தருமலிங்கம், மண்டலக்குழு தலைவர்கள் ஏ.பி.எல்.சுந்தரம், எஸ்.குமார், நியமனக்குழு தலைவர் சி.கே.சிவாஜி, கல்விக்குழு தலைவர் கே.சூரியாச்சாரி, சுகாதாரக்குழு தலைவர் பி.ரமேஷ், வரிக்குழு தலைவர் இ.இளவரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.