Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை, தூத்துக்குடியில் 20 இடங்களில் அம்மா உணவகங்கள் திறப்பு

Print PDF
தினமணி        03.06.2013

நெல்லை, தூத்துக்குடியில் 20 இடங்களில் அம்மா உணவகங்கள் திறப்பு


திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சிகளில் தலா 10 இடங்களில் அம்மா உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விடியோ கான்பரன்சிங் மூலம் திறந்துவைத்தார்.

ஏழை, எளிய மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் சென்னை மாநகராட்சிப் பகுதியில்  200 இடங்களில் அம்மா மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டு சிறப்பாக  செயல்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து, தமிழகத்தின் பிற 9 மாநகராட்சிகளிலும்  அம்மா மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, திருநெல்வேலி மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகளிலும் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை விடியோ கான்பரன்சிங்  மூலம் திறந்துவைத்தார்.

அதைத்தொடர்ந்து, மேலப்பாளையம் மண்டல அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா  உணவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர்  பூ.செந்தூர்பாண்டியன் உணவு விற்பனையைத் தொடங்கிவைத்தார்.

மாநகராட்சி மேயர் விஜிலா சத்தியானந்த், தமிழக வீட்டு வசதி வாரிய உறுப்பினர்  ஆர்.முருகையாபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன்,  முத்துலெட்சுமி, மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி, மாநகராட்சி ஆணையர்  (பொறுப்பு) த.மோகன், துணை மேயர் பூ.ஜெகநாதன், மண்டலத் தலைவர்கள் மாதவ ராமானுஜம், ம.கிறிஸ்துராஜன், எஸ்.கே.ஏ.ஹைதர் அலி, ந.மோகன், மாநகராட்சிப்  பொறியாளர் கே.பி. ஜெய்சேவியர், செயற்பொறியாளர் வி. நாராயணநாயர், மாநகர நல அலுவலர் பி. முனீஸ்வரி, மாவட்ட ஊராட்சி தலைவர் நாராயணபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல்முருகன், மானூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கல்லூர் இ. வேலாயுதம், பரணி சங்கரலிங்கம், குறிச்சி டி.சேகர் மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முதல் நாளில் சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுடன் சர்க்கரைப் பொங்கல்  இலவசமாக வழங்கப்பட்டது. மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உணவுகளை வாங்கி  உண்டனர்.

தூத்துக்குடி... தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்கள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன.

குரூஸ்புரம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அம்மா உணவகத்தில்  மாநகராட்சி சார்பில் விழா நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா விடியோ கான்பரன்சிங் மூலம் உணவகத்தைத் திறந்துவைத்தபிறகு தொழிலாளர் நலத் துறை அமைச்சர்  சி.த. செல்லப்பாண்டியன் உணவு வழங்கி தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார், மாநகராட்சி மேயர் எல். சசிகலா புஷ்பா, ஆணையர் சோ. மதுமதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என். சின்னத்துரை, துணை மேயர் பி. சேவியர், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா. ஹென்றி, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பி. சண்முகவேல் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும், சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்க்கும் வழங்கப்படும் எனவும், பார்சல் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.