Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அம்மா உணவகத்தில் புதிய உணவு வகைகளுக்கு அமோக வரவேற்பு

Print PDF
தினமணி                 04.06.2013

அம்மா உணவகத்தில் புதிய உணவு வகைகளுக்கு அமோக வரவேற்பு
 


சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் புதிய உணவு வகைகளுக்கு அமோக வரவேற்பு உள்ளது. திங்கள்கிழமை ஒரே நாளில் மட்டும் 33,398 பொங்கல் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் இட்லி, சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் கூடுதலாக பொங்கல், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவற்றின் விற்பனையை முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து காலையில் வழங்கப்படும் இட்லியுடன் கூடுதலாக பொங்கலும், மதியத்தில் வழங்கப்படும் சாம்பார் மற்றும் தயிர் சாதங்களுடன் கூடுதலாக கறிவேப்பிலை அல்லது எலுமிச்சை சாதமும் வழங்கப்படுகிறது.

பொங்கல் விற்பனை அமோகம்: ஞாயிற்றுக்கிழமை முதல், கூடுதல் உணவு வகைகள் விற்பனை தொடங்கியுள்ளது. திங்கள்கிழமை காலை 200 அம்மா உணவகங்களிலும் மொத்தம் 33,398 பொங்கல் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மேலும் மதிய வேளையில் 18,146 கறிவேப்பிலை சாதமும், 20,542 எலுமிச்சை சாதமும் விற்பனையாகி உள்ளன. இந்த உணவகங்களில் செவ்வாய்க்கிழமை முதல் மதிய வேளைகளில் சாம்பார் மற்றும் தயிர் சாதங்களுடன் கறிவேப்பிலை அல்லது எலுமிச்சை சாதம் வழங்கப்படும். முதல் நாளான திங்கள்கிழமை இரண்டு சாத வகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இட்லி விற்பனை குறைவு: உணவகங்களில் புதிய சாத வகைகளின் விற்பனை தொடங்கியதால் இட்லி, சாம்பார், தயிர் சாதங்களின் விற்பனை சற்று குறைந்துள்ளது.

இந்த உணவகங்களில் வழக்கமாக சுமார் 3.30 லட்சம் இட்லியும், 30,000 தயிர் சாதமும், 60,000 சாம்பார் சாதமும் விற்பனை ஆகும்.  புதிய உணவு வகைகளின் அறிமுகத்தால், சுமார் 2.50 லட்சம் இட்லியும், 35,000 சாம்பார் சாதமும், 28,000 தயிர் சாதமும் மட்டுமே விற்பனையாகியுள்ளன.
Last Updated on Tuesday, 04 June 2013 06:07