Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலம் மாநகரில் 10 இடங்களில் உள்ள ‘அம்மா’ உணவகத்தில் இட்லி, சாம்பார்– தயிர் சாதம் ரூ.33,672–க்கு விற்பனை சாப்பாட்டிற்காக நீண்ட வரிசையில் ஆர்வமுடன் பொதுமக்கள் காத்திருப்பு

Print PDF
தினதந்தி       03.06.2013

சேலம் மாநகரில் 10 இடங்களில் உள்ள ‘அம்மா’ உணவகத்தில் இட்லி, சாம்பார்– தயிர் சாதம் ரூ.33,672–க்கு விற்பனை சாப்பாட்டிற்காக நீண்ட வரிசையில் ஆர்வமுடன் பொதுமக்கள் காத்திருப்பு


சேலம் மாநகரில் 10 இடங்களில் உள்ள அம்மா உணவகம் மூலம் இட்லி மற்றும் சாம்பார்–தயிர் சாதம் நேற்று ஒரே நாளில் ரூ.33,672–க்கு விற்கப்பட்டது.

‘அம்மா உணவகம்’


சேலம் மாநகராட்சியில் மலிவு விலையில் ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் அம்மா உணவகங்கள் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, சேலத்தில் ரூ.2 கோடியே 31 லட்சம் மதிப்பில் 10 இடங்களில் அம்மா உணவக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

சேலம் கொண்டலாம்பட்டி மண்டலத்தில் கருங்கல்பட்டி, மணியனூர் பகுதியிலும், சூரமங்கலம் மண்டலத்தில் பழைய சூரமங்கலம் சந்தைப்பேட்டை, சூரமங்கலம் உழவர் சந்தை பகுதியிலும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் மண்டல அலுவலகம் அருகில், குமாரசாமிபட்டி பகுதியிலும், அம்மாபேட்டை மண்டலத்தில் முதல்அக்ரஹாரம் காய்கறி மார்க்கெட், மேற்குதெரு ஜோதி திரையரங்கம் பகுதியிலும், மேலும், வெங்கடப்பா ரோடு, சத்திரம் மேம்பாலம் அருகில் என மொத்தம் 10 இடங்களில் அம்மா உணவகம் கட்டப்பட்டுள்ளது.

ஜெயலலிதா திறப்பு

சேலத்தில் புதிதாக கட்டுப்பட்டுள்ள ‘அம்மா உணவகம்’ திட்டத்தை நேற்று முன்தினம் மாலை தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து, வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இதற்கான விழா சேலம் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் நடந்தது. விழாவுக்கு மாநகராட்சி மேயர் சவுண்டப்பன் தலைமை தாங்கினார். ஆணையாளர் அசோகன் வரவேற்றார். தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவுகள் மற்றும் இனிப்பு வழங்கி தொடங்கி வைத்தார்.

நேற்று முதல் உணவு வழங்குவது முறைப்படுத்தப்பட்டது. அம்மா உணவகத்தில் காலை 7 மணி முதல் 10 மணிவரையிலும், மதியம் பகல் 12 மணி முதல் 3 மணிவரையிலும் என 2 வேளை உணவகம் திறக்கப்பட்டிருக்கும். காலையில் இட்லி மட்டும் சப்ளை செய்யப்பட்டது. ஒரு இட்லி விலை ரூ.1 மட்டுமே. இதுபோல மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்கப்பட்டது. சாம்பார் சாதம் ரூ.5–க்கும், தயிர் சாதம் ரூ.3–க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நீண்ட வரிசை

சேலம் மாநகரில் ஓட்டல்களில் ஒரு இட்லி விலை குறைந்த பட்சம் ரூ.5 ஆகும். இதுபோல சாம்பார் சாதம், தயிர் சாதம் ரூ.20 முதல் 40 வரை விற்பனைச் செய்யப்படுகிறது. ஆனால், அம்மா உணவகத்தில் மலிவான விலையில் உணவு வழங்கப்படுவதால், நேற்று சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள 10 உணவகங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் உணவை வாங்கி சாப்பிட்டனர்.

நேற்று காலை 10 உணவகங்களிலும் இட்லி மட்டும் 11,976 எண்ணம் விற்கப்பட்டு ரூ.11,976 வசூல் ஆனது. சாம்பார் சாதம் 2,985 விற்பனை செய்யப்பட்டு ரூ.14 ஆயிரத்து 925 வசூல் ஆனது. இதுபோல தயிர் சாதம் 2,257 விற்பனை செய்யப்பட்டு ரூ.6,771 வசூல் ஆனது. ஆக மொத்தம் நேற்று ஒரே நாளில் ரூ.33,672–க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.