Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அம்மா உணவகத்தில் முதல் நாளில் 10 ஆயிரம் இட்லி, 3,568 சாம்பார் சாதம், 2780 தயிர்சாதம் விற்பனை அரைமணி நேரத்தில் தீர்ந்ததால் சாப்பிட வந்தவர்கள் ஏமாற்றம்

Print PDF
தினதந்தி       03.06.2013

அம்மா உணவகத்தில் முதல் நாளில் 10 ஆயிரம் இட்லி, 3,568 சாம்பார் சாதம், 2780 தயிர்சாதம் விற்பனை அரைமணி நேரத்தில் தீர்ந்ததால் சாப்பிட வந்தவர்கள் ஏமாற்றம்


அம்மா உணவகத்தில் முதல் நாளில் 10 ஆயிரம் இட்லி, 3,568 சாம்பார் சாதம், 2,780 தயிர்சாதம் விற்பனையாயின. தொடங்கிய அரைமணி நேரத்தில் விற்றுத் தீர்ந்ததால் சாப்பிட வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அம்மா உணவகம்

மதுரை நகரில் 10 இடங்களில் அம்மா உணவகத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் மாலை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து இந்த உணவகங்கள் நேற்று காலை முதல் செயல்படத் தொடங்கின.

அங்கு 1 இட்லி 1 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த உணவகம் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், பகல் 12 மணி முதல் 3 மணி வரையும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இட்லி விற்றது

நேற்று காலை 7 மணிக்கு உணவகங்கள் திறந்த சில நிமிடங்களில், மக்கள் கூட்டம் அலைமோதியது. இட்லிக்கு டோக்கன் பெற நீண்ட வரிசையில் பொதுமக்கள் அணிவகுத்து நின்றனர். ஆனால் ஒவ்வொரு உணவகத்திலும் சுமார் 1,000 இட்லி என்ற அளவிலேயே தயார் செய்யப்பட்டு இருந்தது.

எனவே கட்டுக்கடங்காத கூட்டத்தால் அரை மணி நேரத்திலேயே அனைத்து உணவகங்களிலும் இட்லி விற்றுப் போனது.

மாணவர்கள்

இதனால் வரிசையில் நின்ற மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். அதே நிலை தான் பகலிலும் நடந்தது.

பகல் 12 மணிக்கு சாம்பார், தயிர் சாதம் விற்பனை தொடங்குவதற்கு முன்பே, ஏராளமான மக்கள் உணவகத்தை முற்றுகையிட்டு நின்றனர். விற்பனை தொடங்கியவுடன், கூட்டம் அலைமோதியது. புதூர் உணவகத்தில் ஐ.டி.ஐ. மாணவர்கள் அணிவகுத்து நின்றனர்.

1 மணி நேரத்தில்...

இதே போல் நகரின் மற்ற உணவகங்களிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரிசையாக நின்று டோக்கன் பெற்று உணவு அருந்தினர். சுமார் 1 மணி நேரத்தில் அனைத்து உணவகங்களிலும் சாம்பார், தயிர் சாதம் காலியானது. இதனால் விற்பனை முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

10 உணவகங்களிலும் காலையில் 9 ஆயிரத்து 930 இட்லிகள் விற்பனையாயின. பகலில் 3 ஆயிரத்து 568 சாம்பார் சாதமும், 2 ஆயிரத்து 780 தயிர் சாதமும் விற்பனையாயின.

மாநகராட்சி பதில்

அம்மா உணவகத்திற்கு மக்கள் அமோக ஆதரவு தெரிவித்து உள்ளதால், இட்லி மற்றும் சாம்பார்–தயிர் சாதங்களின் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து பகுதிகளிலும் எழுந்து உள்ளது.

ஆனால் ஒவ்வொரு உணவகத்திலும் காலையில் இட்லி 300 பேருக்கும், சாம்பார் சாதம் 300 பேருக்கும், தயிர் சாதம் 300 பேருக்கும் என்ற அளவில் தயார் செய்வதாகவும், இந்த எண்ணிக்கை அதிகரிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேயர் ஆய்வு

முன்னதாக நேற்று திருப்பரங்குன்றம் அம்மா உணவகத்தில் மேயர் ராஜன் செல்லப்பா திடீர் ஆய்வு மேற்கொண்டார். உணவு வகைகளை தினமும் தரமாக, சுகாதாரமாக தயாரித்து வழங்க வேண்டும் என மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் மேயர் தெரிவித்தார்.