Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒரு இட்லி ரூ. 1, தயிர் சாதம் ரூ.3, சாம்பார் சாதம் ரூ.5: கோவையில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

Print PDF
தினதந்தி       02.06.2013

ஒரு இட்லி ரூ. 1, தயிர் சாதம் ரூ.3, சாம்பார் சாதம் ரூ.5: கோவையில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்


கோவை மாகராட்சியில் 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அம்மா உணவகங்கள்


ஏழை எளிய மக்களுக்கு சுகாதார மற்றும் தரமான உணவு வகைகள் மலிவு விலையில் தினமும் கிடைக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் அம்மா உணவகங்களை 19.2.2013 அன்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதை தொடர்ந்து கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர் நெல்லை, சேலம், வேலூர், தூத்துக்குடி, ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளில் புதிய அம்மா உணவகங்களை திறந்து வைத்தும் சென்னை மாநகராட்சியின் 200 அம்மா உணவகங்களில் கூடுதலாக பொங்கல் மற்றும் கறிவேப்பிலை, எலுமிச்சை சாதம் ஆகிய உணவு வகைகளின் விற்பனையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று மதியம் சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதன்படி கோவை மாநகராட்சிக்குட்பட்ட பூ மார்க்கெட், சிங்காநல்லூர் பஸ் நிலையம், மணியகாரன்பாளையம், குறிச்சி மாநகராட்சி அலுவலகம், ராமநாதபுரம் 80 அடி ரோடு, திருமால் வீதி திருமண மண்டபம், புதிய பஸ் நிலையம், மசக்காளிப்பாளையம், சரவணம்பட்டி அம்மன் நகர், குனியமுத்தூர் ஆகிய 10 இடங்களில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

மேயர் பேச்சு

இவற்றின் திறப்பு விழா பூ மார்க்கெட் வளாகத்தில் நேற்று மதியம் நடந்தது. இதில் கோவை மேயர் செ.ம.வேலுச்சாமி, மாவட்ட கலெக்டர் எம்.கருணாகரன், எம்.எல்.ஏ.க்கள் ஆர்.சின்னசாமி, எஸ்.பி.வேலுமணி, தா.மலரவன், சேலஞ்சர்துரை, ஓ.கே.சின்னராஜ், ஆணையாளர் லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் அம்மா உணவகங்களை பொத்தானை அழுத்தி திறந்து வைத்தார். பின்னர் கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுச்சாமி முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது:–

கோவை மாநகராட்சியில் முதல்–அமைச்சரின் உத்தரவிற்கிணங்க பல்வேறு திட்டங்கள் மக்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதன்படி கோவை மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் திறந்து வைத்த முதல்–அமைச்சருக்கு கோவை மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பூ விற்கும் பெண்

பின்னர் ருக்மணி என்ற பயனாளி பேசியதாவது:–

நான் பூ மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறேன். காலை 7 மணிக்கு வியாபாரத்துக்கு வந்து விட்டால் காலை, மதியம் சாப்பாடு சாப்பிட முடியாது. டீ மட்டுமே குடித்து வியாபாரத்தை கவனிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் முதல்–அமைச்சரின் சீரிய முயற்சியினால் பூ மார்க்கெட்டிலேயே மலிவு விலை உணவகத்தை கொண்டு வந்துள்ளதால் நாங்கள் காலையிலேயே வியாபாரத்துக்கு வந்தாலும் காலை, மற்றும் மதிய உணவுகளை சாப்பிட்டு பசியாற வைத்த முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு ருக்மணி பேசினார்.

சத்திய பிரியா என்ற பெண்மணி பேசியதாவது:–

நான் நிலா மகளிர் சுய உதவிக்குழுவில் பணியாற்றி வருகிறேன். கோவையில் 10 இடங்களில் அம்மா உணவங்களை ஏற்படுத்தியதின் மூலம் 120 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

10 இடங்களில் நடந்த அம்மா உணவக திறப்பு விழாவில் துணை மேயர் லீலாவதி, மண்டல தலைவர்கள் கணபதி ராஜ்குமார், கே.ஆர்.ஜெயராமன், கே.ஏ.ஆதிநாராயணன், எம்.பெருமாள்சாமி, கோவை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.பி.ராஜு, மற்றும் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதே நேரத்தில் கோவையின் மற்ற 9 இடங்களில் அமைக்கப்பட்ட அம்மா உணவகங்களும் திறந்து வைக்கப்பட்டு பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. திறப்புவிழாவை தொடர்ந்து மேயர் செ.ம.வேலுச்சாமி அனைத்து அம்மா உணவகங்களுக்கும் சென்று உணவு தயாரிப்பது, உணவு வினியோகம் செய்வதை பார்வையிட்டார்.

மேயர் அறிவுரை

கோவை ராமநாதபுரம் அம்மா உணவகத்தை ஆய்வு செய்ய வந்த மேயர் செ.ம.வேலுச்சாமி பொது மக்களுக்கு தரமான, சுத்தமான உணவு தயாரித்து வழங்குமாறு மாநகராட்சி அதிகாரிகளையும், பணியாளர்களையும் அறிவுறுத்தினார். அப்போது கவுன்சிலர்கள் சக்திவேல்,மலர்விழி நாகரத்தினம்,கணேசன்,லலிதா மணி மற்றும் செல்வகுமார்,காட்டூர் செல்வராஜ்,தளபதி செந்தில்,வெள்ளலூர் பாலகிருஷ்ணன்,சி.சி.எம்.எஸ். ஹரிகிருஷ்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

அம்மா உணவகத்தில் ஒரு இட்லி 1 ரூபாய்க்கும், தயிர் சாதம் ரூ. 3–க்கும், சாம்பார் சாதம் ரூ. 5–க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும் அம்மா உணவகங்கள் செயல்படும். இந்த உணவகத்துக்கு ஆகும் செலவு கோவை மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும். தொடக்க விழாவான நேற்று அனைத்து அம்மா உணவகங்களிலும் கேசரி கூடுதலாக வழங்கப்பட்டன.

சூரிய ஒளி மின்சார வசதி

முதல் கட்டமாக சிங்காநல்லூர், பூ மார்க்கெட், குறிச்சி ஆகிய 3 இடங்களில் உள்ள அம்மா உணவகங்களில் சூரிய ஒளி மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு உணவகத்திலும் 2 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் திறனுள்ள சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 10 மின்சார விளக்குகள், 10 மின்சார விசிறிகள், ஒரு கம்ப்யூட்டர் செயல்படும். படிப்படியாக மற்ற உணவகங்களிலும் சூரிய ஒளி மின்சார வசதி செய்யப்பட உள்ளது.

ஒவ்வொரு அம்மா உணவகங்களிலும் டோக்கன் கொடுப்பதற்கு தனி இடமும், டோக்கனை கொடுத்து உணவு பெறுவதற்கு தனி இடமும், சமையலறைக்கு தனி அறையும், சாப்பிடுவதற்கு வசதியான இடமும், சாப்பிட்ட தட்டுகளை வைப்பதற்கு தனி இடமும், கைகழுவுவதற்கு தனி இடமும் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளன.