Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்தில் ஸ்மார்ட் கார்டுக்கு புகைப்படம் எடுக்கும் தேதிகள்

Print PDF
தினத்தந்தி         06.06.2013

கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்தில் ஸ்மார்ட் கார்டுக்கு புகைப்படம் எடுக்கும் தேதிகள்


கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு எடுப்பதற்கான புகைப்படம் எடுக்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் எம்.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

ஸ்மார்ட் கார்டு

கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிக்கென அந்தந்த பகுதிகளில் அமைக்கப்படும் முகாம்களில் பொது மக்களின் முகம், கருவிழி, கைவிரல்ரேகை பதிவு செய்யப்படுகிறது. 2010–ம்ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இடம் பெற்றவர்கள் இந்த முகாம்களில் தங்கள் பெயர்களை பதிவு செய்து புகைப்படம் எடுக்க தகுதியானவர்கள். முகாம் நடைபெறுவதற்கு முன்னர் கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாக கே.ஒய்.ஆர். (நோ யுவர் ரெசிடென்ட்) படிவத்தை வழங்குவார்கள். அந்த படிவத்தில் கேட்கப்பட்டுள்ள குடும்பஅட்டை எண் உள்ளிட்ட விவரங்களை கணக்கெடுப்பாளருக்கு தெரிவித்து பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் முகாம் நடைபெறும் நாளன்று அதற்கென வரையறுக்கப்பட்ட இடத்துக்கு சென்று புகைப்படம் எடுத்து தங்களை பற்றிய தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம்.

முகாமிற்கு செல்லும்போது மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டுடன் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, உழவர் பாதுகாப்பு அட்டை, ஓட்டுனர் உரிமம், முதியோர் உதவி தொகை ஆணை, மாற்று திறனாளி அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.

இடம் பெறாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

2010–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடம் பெறாதவர்கள் முகாம் நடைபெறும் இடத்தில் வழங்கப்படும் என்.பி.ஆர், (நேசனல் பாப்புலேசன் ரிஜிஸ்தர்) படிவத்தை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் விவரங்களை சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டு அவர்களுக்கு இரண்டாவது முகாம் நடத்தப்பட்டு புகைப்படம் எடுக்கப்படும்.

எந்தெந்த தேதிகள்

கோவை மாவட்டத்தில் இந்த மாதத்தில் (ஜூன்) கீழே குறிப்பிட்டுள்ள நகராட்சி, கிராமப்பகுதிகளில் இந்த பணிகள் நடைபெற உள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:–

கோவை மாநகராட்சி வார்டு எண் 80 முதல் 82 வரை உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் 15–ந் தேதி வரையும், வார்டு எண் 83, 84 ஆகிய வார்டுகளை சேர்ந்தவர்களுக்கு வருகிற 16–ந் தேதி முதல் 25–ந் தேதி வரையும், வார்டு எண் 25, 45 பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு 26–ந் தேதி முதல் ஜூலை 5–ந் தேதி வரையும் ஸ்மார்ட் கார்டுக்கு புகைப்படம எடுக்கப்படும்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான கோமங்கலம், கோமங்கலம் புதூர், சீலக்காம்பட்டி, நல்லாம்பள்ளி, கஞ்சம்பட்டி, கூளநாயக்கன்பட்டி, கோலார்பட்டி, சிஞ்சுவாடி, மலையாண்டிப்பட்டினம், சோலபாளையம், நாட்டுக்கல் பாளையம், ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு 5–ந் தேதி (நேற்று) முதல் வருகிற 11–ந் தேதி வரையும், ஊஞ்சவேலாம்பட்டி, மாக்கிணாம்பட்டி, சின்னாம்பாளையம் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு வருகிற 12–ந் தேதி முதல் 18–ந் தேதி வரையும், சூலேஸ்வரன்பட்டி, நாய்க்கன்பாளையம் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு வருகிற 19–ந் தேதி முதல் 25–ந் தேதி வரையும், ஜமீன்கோட்டாம்பட்டி, வக்கம்பாளையம், எஸ்.பொன்னாபுரம், தொண்டாமுத்தூர், சமத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு வருகிற 26–ந் தேதி முதல் ஜூலை 2–ந் தேதி வரையும் புகைப்படம் எடுக்கப்படுகிறது. கோவை வடக்கு தாலுகாவுக்குட்பட்ட சோமையம்பாளையம், பகுதியில் வருகிற 10–ந் தேதி முதல் 24–ந் தேதி வரையும் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் 25–ந் தேதி முதல் ஜூலை 10–ந் தேதி வரையும் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1 முதல் 4 வரை உள்ள பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு 5–ந் தேதி (நேற்று) முதல் 11–ந் தேதி வரையும், வார்டு எண் 5 முதல் 8 வரை உள்ளவர்களுக்கு 12–ந் தேதி முதல் 18–ந் தேதி வரையும், வார்டு எண் 9 முதல் 11 வரை உள்ளவர்களுக்கு 19–ந் தேதி முதல் 25–ந் தேதி வரையும், வார்டு எண் 12 முதல் 17 வரை உள்ளவர்களுக்கு 26–ந் தேதி முதல் ஜூலை 2–ந் தேதி வரையும், வார்டு எண் 18 முதல் 20 வரை உள்ளவர்களுக்கு ஜூலை 3–ந் தேதி முதல் 9–ந் தேதி வரையும், ஓடந்துறை பகுதியை சேர்ந்தவர்களுக்கு இன்று (6–ந் தேதி) முதல் 12–ந் தேதி வரையும், சிக்கதாசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு இன்று (6–ந் தேதி) முதல் 21–ந் தேதி வரையும், நெல்லித்துறை பகுதியை சேர்ந்தவர்களுக்கு 22–ந் தேதி முதல் 28–ந் தேதி வரையும், தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர்களுக்கு 22–ந் தேதி முதல் ஜூலை 2–ந் தேதி வரையும், வால்பாறை நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 3,4,8 ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு கடந்த 3–ந் தேதி முதல் 9–ந் தேதி வரையும், வார்டு எண் 9, 10 ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு 10–ந் தேதி முதல் 16–ந் தேதி வரையும், வார்டு எண் 2, 11, 12 வார்டுகளை சேர்ந்தவர்களுக்கு 17–ந் தேதி முதல் 23–ந் தேதி வரையும், வார்டு எண் 13, 14, 15 வார்டுகளை சேர்ந்தவர்களுக்கு வருகிற 24–ந் தேதி முதல் ஜூலை 2–ந் தேதி வரையும் புகைப்படம் எடுக்கப்படும்.

இந்த முகாமில் எடுக்கப்படும் ஸ்மார்ட் கார்டுகள் அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கு அவசியம் என்பதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.