Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தமிழக அரசு விருது பெற்ற சுயஉதவிக் குழுவுக்கு மேயர் பாராட்டு

Print PDF
தினமணி               14.06.2013

தமிழக அரசு விருது பெற்ற சுயஉதவிக் குழுவுக்கு மேயர் பாராட்டு


தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருது பெற்ற கோவையைச் சேர்ந்த பனிமலர் மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு கோவை மேயர் செ.ம.வேலுசாமி வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவித்தார்.

தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கோவை, சரவணம்பட்டியைச் சேர்ந்த பனிமலர் மகளிர் சுயஉதவிக் குழு பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்து அதை மறுசுழற்சி செய்வதில்  மாநிலத்தில் 2-ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. இதற்காக தமிழக அரசால் இரண்டாம் பரிசாக ரூ. 3 லட்சம் பெற்றுள்ளது.

இக்குழுவினர் மேயர் செ.ம.வேலுசாமியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். திடக்கழிவு மேலாண்மையில் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி செய்வதிலும் தாங்கள் செயல்பட்ட முறை குறித்து மேயரிடம் விளக்கினர்.

பனிமலர் மகளிர் சுயஉதவிக் குழுவின் தலைவி ராணி கூறியது: கடந்த 2010-ல் எங்கள் குழுவினர் பஞ்சாயத்து வாரியாகச் சென்று பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தோம். அதற்கு முன்னதாக ரூ. 2 லட்சம் மதிப்பில் இயந்திரத்தை வாங்கினோம்.

நேரடியாகச் சென்று பிளாஸ்டிக் பொருள் சேகரிப்பதில் சிரமம் இருந்ததால், பிளாஸ்டிக் கழிவுப்பொருள் வியாபாரம் செய்பவர்களிடமும் சில நிறுவனங்களிடமிருந்தும் பிளாஸ்டிக் பொருள்களை நேரடியாக வாங்கினோம். நாளொன்றுக்கு 500 கிலோ வரை அரைத்து ஒரு கிலோ ரூ. 25 வீதம் விற்பனை செய்து வருகிறோம்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் பிளாஸ்டிக் கலவையை சாலை அமைக்கப் பயன்படுத்துகிறார்கள். நாங்கள் செய்யும் இத்தொழிலைப் பாராட்டி தமிழக அரசு மாநிலத்தில் இரண்டாமிடமாகத் தேர்வு செய்து எங்களுக்கு ரூ. 3 லட்சம் பரிசு அளித்துள்ளது என்றார்.

பிற மகளிர் சுயஉதவிக் குழுவினரும் இது போன்ற தொழில்களைச் செய்து பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என்று மேயர் செ.ம.வேலுசாமி கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் க.லதா, துணை மேயர் லீலாவதி உண்ணி, துணை ஆணையர் சு.சிவராசு ஆகியோர் கலந்துகொண்டனர்.