Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

16 நாள்களில் 1.92 லட்சம் இட்லிகள் விற்பனை

Print PDF

தினமணி               19.06.2013 

16 நாள்களில் 1.92 லட்சம் இட்லிகள் விற்பனை

திருநெல்வேலி மாநகராட்சியில் அம்மா மலிவு விலை உணவகங்களில் கடந்த 16 நாள்களில் 1.92 லட்சம் இட்லிகள் விற்பனையாகியுள்ளன. மேலும், தலா 51 ஆயிரம் தயிர் சாதங்கள் மற்றும் சாம்பார் சாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா மலிவு விலை உணவகங்கள் கடந்த 2-ம் தேதி திறக்கப்பட்டன. இவற்றை தமிழக முதல்வர் ஜெயலலிதா விடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

அம்மா உணவகங்களின் செயல்பாடுகள் குறித்து மேயர் விஜிலா சத்தியானந்த், செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

இம் மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. 7 உணவகங்கள் நிரந்தர கட்டடங்களிலும், வையாபுரிநகர், அம்பேத்கர் நகர், திம்மராஜபுரம் ஆகிய இடங்களில் மட்டும் தாற்காலிக இடங்களிலும் உணவகங்கள் செயல்படுகின்றன. இந்த மூன்று உணவகங்களும் வியாழக்கிழமை (ஜூன் 20) முதல் நிரந்தரக் கட்டடங்களில் இயங்கும். மேலப்பாளையம் மண்டல அலுவலக வளாகம், பாளையங்கோட்டை மணக்காவலன்பிள்ளை மருத்துவமனை அருகே, வையாபுரி நகர், தொண்டர் சன்னதி ஆகிய பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே உணவுகள் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.

ஒவ்வொரு உணவகத்திலும் தினமும் 1200 இட்லி, 300 தயிர் சாதம், 300 சாம்பார் சாதம் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு சில கடைகளில் விற்பனை சற்று குறைவாக உள்ளது. அந்த உணவகங்களில் இருந்து உணவு அருகில் உள்ள மற்ற உணவகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இப்போது மதியம் தயிர் சாதத்திற்கு ஊறுகாய் கூடுதலாக வழங்கப்படுகிறது. சென்னையில் உள்ள உணவகங்களில் வழங்கப்படும் சப்பாத்தி உள்ளிட்ட இதர உணவு வகைகள் வரும் செப்டம்பர் மாதம் முதல் விற்பனை செய்யப்படும்.

அம்மா மலிவு விலை உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளதால், உணவகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் அனுமதி பெற்று விரிவுபடுத்தப்படும் என்றார் மேயர்.

1.92 லட்சம் இட்லிகள் விற்பனை:திருநெல்வேலியில் மலிவு விலை உணவகங்கள் கடந்த 2-ம் தேதி தொடங்கப்பட்டன.  முதல் நாளில் காலை உணவான இட்லி விற்பனை செய்யப்படவில்லை. மதியம் தயிர் சாதம் மற்றும் சாம்பார் சாதம் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. 3-ம் தேதி முதல் தான் இட்லி விற்பனை தொடங்கியது.

அதன்படி செவ்வாய்க்கிழமை வரை கடந்த 16 நாள்களில் 10 உணவகங்களிலும் மொத்தம் 1.92 லட்சம் இட்லிகள் விற்பனையாகியுள்ளன. 2-ம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை 17 நாள்களில் 10 உணவகங்களிலும் சேர்த்து 51 ஆயிரம் தயிர் சாதங்கள், 51 ஆயிரம் சாம்பார் சாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை மொத்தம் ரூ. 6 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருள்கள் விற்பனையாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.