Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போட்டி நிறைந்த உலகில் ‘தொடர்ந்து போராடினால் வெற்றி உங்களை தேடி வரும்’ பள்ளி மாணவ–மாணவிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி.சைலேந்திரபாபு அறிவுரை

Print PDF

தினத்தந்தி               19.06.2013

போட்டி நிறைந்த உலகில் ‘தொடர்ந்து போராடினால் வெற்றி உங்களை தேடி வரும்’ பள்ளி மாணவ–மாணவிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி.சைலேந்திரபாபு அறிவுரை

http://www.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/sylendrababu.jpg

போட்டி நிறைந்த உலகில் தொடர்ந்து போராடினால் வெற்றி உங்களை தேடி வரும் என்று பள்ளி மாணவ–மாணவிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி.சைலேந்திரபாபு அறிவுரை வழங்கினார்.

பரிசளிப்பு விழா

 கோவை மாநகராட்சி பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வில் முதல் 3 இடங்கள் மற்றும் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் முதல் 3 இடங்களை பிடித்த 21 மாணவ–மாணவிகளுக்கு தனியார் அமைப்பு சார்பில் பரிசளிப்பு விழா கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. விழாவில் கடலோர காவல் படை கூடுதல் டி.ஜி.பி சி.சைலேந்திரபாபு கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவ–மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

சாதனை படைக்க ஆசை

உங்கள் மனதில் பெரிய சாதனை படைக்க ஆசை உள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் 10 யானை களுக்கு சமமாக உள்ளீர்கள். ஆகவே சாதனை படைக்க ஆசைப்படுங்கள். தற்போது போட்டி நிறைந்த உலகமாக உள்ளது. ஆகவே நீங்கள் தொடர்ந்து போராட வேண்டும். அப்போது தான் வெற்றி உங்களை தேடி வரும்.

வாழ்க்கை என்பது ஒரு போராட்ட களம். அதில் நீங்கள் போர்வீரர்களாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். நீங்கள் சாதாரண ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை. சாதனை படைக்க முடியும். ஏழையாக பிறப்பதில் தவறு கிடையாது. ஆனால் ஏழையாக பிறந்து வளர்ந்து இறந்து போவது தான் மிகப்பெரிய தவறு. ஏழை சாதிப்பதில் எந்த தடையும் இருப்பதில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும்.

பதவிகள் காத்திருக்கிறது

அரசு பள்ளியில் படிப்பதால் சாதனை படைக்க முடியாது என்று எண்ணக்கூடாது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூட அரசு பள்ளியில் படித்தவர் தான். திறமையுள்ள மாணவர்களுக்கு உயர்ந்த பதவிகள் காத்திருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. நீங்கள் நன்றாக படித்தால், உங்கள் பெற்றோர்தான் முதலில் சந்தோஷம் அடைவார்கள். எனக்கு தெரிந்த மாணவர் ஒருவர் ஓட்டல் கடையில் வேலை பார்த்து, அதிக மதிப்பெண் பெற்று, தற்போது ஆந்திராவில் ஐ.ஏ.எஸ் பணியில் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கோவை மாநகராட்சி கமிஷனர் ஜி.லதா, போலீஸ் துணை சூப்பிரண்டு (மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு) பாலாஜி சரவணன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். தனியார் அமைப்பின் தலைவர் சி.ஆர்.சுவாமிநாதன், செயலாளர் எம்.என்.பத்மநாபன், ஒருங்கிணைப்பாளர் சதிஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.