Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போதிய விற்பனை நடைபெறாத அம்மாஉணவகங்களை இடம்மாற்றஆலோசனை

Print PDF

தினகரன்             20.06.2013 

போதிய விற்பனை நடைபெறாத அம்மாஉணவகங்களை இடம்மாற்றஆலோசனை

மதுரை, : போதிய அளவில் விற்பனை நடைபெறாத 3 அம்மா உணவகங்களை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

மதுரையில் மாநகராட்சி சார்பில் 10 இடங்களில் மலிவு விலை (அம்மா) உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் தினமும் தலா 300 பேருக்கு காலையில் ஒரு இட்லி ரூ.1 விலையில் 4 இட்லி, மதியம் ஒரு சாம்பார் சாதம் (ரூ.5), ஒரு தயிர் சாதம் (ரூ.3) வீதம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த உணவகங்கள் புதூர், ராம்நகர், மேலவாசல், திருப்பரங்குன்றம், ஆரப்பாளையம், ராமராயர் மண்டபம், சிஎம்ஆர் ரோடு, ஆரப்பாளையம், பழங்காநத்தம், காந்திபுரம் ஆகிய இடங்களில் திறக்கப்பட்டுள்ளன.

இதில் காந்திபுரம், பழங்காநத்தம், சிஎம்ஆர் ரோடு ஆகிய 3 உணவகங்களில் போதிய அளவு விற்பனை இல்லை. இதனால் இங்கிருந்து உணவுப்பொருட்கள் வெளியே கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகின்றன.

அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவு, குறிப்பிட்ட நேரத்தில் விற்பனை ஆகாமல் இருந்தால், அந்த உணவை ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களில் கொண்டு சென்று இலவசமாக வழங்க வேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் உணவகத்தை விட்டு வேறு இடத்தில் கொண்டு சென்று விற்பனை செய்யக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
அம்மா உணவகம் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அமைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த 3 உணவகங்களையும் பொதுமக்கள் கண்டுபிடிப்பது கடினம்.

உணவகம் திறக்கப்பட்டது முதல் விற்பனை சரியாக இல்லை என கணக்கெடுப்பில் தெரியவந்தது. ஆனால் திறந்த உணவகத்தை என்ன செய்வது என்பதில் முடிவு எடுக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனர். இங்கு தயாரிக்கப்படும் உணவு, வெளியே விற்பனை செய்யப்படுவதை கண்ட மாநகராட்சி அதிகாரிகள் திகைத்துள்ளனர். இதனால் விற்பனை இல்லாத மூன்று உணவகங்களையும், பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிக்கு மாற்றலாமா என ஆலோசனை நடத்தி வருகின்றனர்.