Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுவரொட்டிகளை ஒழிக்க புது முயற்சி கலாசார சின்னங்களைத் தீட்டி சுவரை அழகுபடுத்தும் பெங்களூர் மாநகராட்சி

Print PDF

தினமணி 24.09.2009

சுவரொட்டிகளை ஒழிக்க புது முயற்சி கலாசார சின்னங்களைத் தீட்டி சுவரை அழகுபடுத்தும் பெங்களூர் மாநகராட்சி

பெங்களூர், செப். 23: சுவரொட்டி இல்லாத பெங்களூர் நகரை உருவாக்கும் முயற்சியாக சுவர்களில் சரித்திர, கலாசார சின்னங்களைத் தீட்டிவருகிறது பெங்களூர் மாநகராட்சி.

பெங்களூர் நகரம் பூங்கா நகரம், தொழில்நுட்ப நகரம் என்ற பெயரைப் பெற்றிருந்தாலும், நகரை அழகுபடுத்துவதிலும், தூய்மையாக வைத்திருப்பதிலும் அந்தப் பெயரைப் பெறவில்லை. நகரில் எங்கு பார்த்தாலும் சினிமா, விளம்பர சுவரொட்டிகள் மயமாகவே காட்சியளிக்கிறது. அதுவும் அரசு சுவர்களில் சுவரொட்டிகளுக்குப் பஞ்சமே இல்லை. சுவரொட்டிகளை அவ்வப்போது மாநகராட்சி அகற்றினாலும் மறுநாள் காலையில் திரைப்படங்களின் புதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கும்.

மாநகராட்சிக்கு பதவிக்காலம் முடிவடைந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் இருந்தாலும் இதே நிலைதான். இந்நிலையில் மாநகராட்சி இப்போது பெருநகர மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. மாநகராட்சியுடன் புதிதாக 7 நகரசபைகள், ஒரு டவுன் பஞ்சாயத்து மற்றும் 210 கிராமங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் மாநகராட்சியின் எல்லை விரிவடைந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள பரத்லால் மீனா பெங்களூரை சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளார். இதையடுத்து முதல்கட்டமாக அவர் திரைப்பட வர்த்தகசபைக்கு கடிதம் எழுதி நகரில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என்று தெரிவித்து, திரைப்பட விளம்பரங்கள் செய்வதற்குத் தனி இடம் ஒதுக்கிக் கொடுக்கத் தயார். அதற்காக மாநகராட்சியை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சுவரொட்டிகள் ஒட்டத் தடை விதித்து கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார். மீறி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளின் திரைப்பட தயாரிப்பாளர்கள் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டது.

சுரவரொட்டிகள் ஒட்டப்படாமல் இருக்கும் சுவர்களை அழகுபடுத்தும் பணியை மாநகராட்சி இப்போது துவக்கியுள்ளது. சுவர்களில் கர்நாடகத்தின் கலை, கலாசாரம், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை, சின்னங்களைப் படமாக வரைந்து வருகிறது மாநகராட்சி. ஹம்பி, பேலூர், ஹளபேடு, சரவணபலகோலா, பிஜாப்பூர், பெல்லாரி, மைசூர் அரண்மனை, கர்நாடகத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்கள், சரித்திர புகழ்பெற்ற இடங்கள், புராதன இடங்களை சுவர்களில் தீட்டி வருகிறது. இவற்றை பார்க்கும்போது பிரமிப்பாகவும், அழகாகவும் உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: வழிபாட்டுத் தலங்கள், சாமி சிலைகள் தவிர 60 வகையான பொருள்கள் தேர்வு செய்யப்பட்டு சுவர்களில் வரையப்பட்டு வருகிறது.

நகரை அழகுபடுத்தும் பணிக்கு மாநகராட்சி சார்பில் பணம் ஏதும் செலவு செய்யப்படவில்லை. மாநகராட்சியிடம் விளம்பரம் வைக்க அனுமதி பெற்ற விளம்பரதாரர்கள் அவர்களிடம் பணியாற்றும் ஓவியர்களைக் கொண்டு சுவர்களை அழகுபடுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் இதை செய்கிறார்கள்.

மேலும் ஓவியக் கல்லூரியில் பயிலும் மாணவர்களும் நகரில் பல்வேறு இடங்களில் சுவர்களை அழகுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர சில ஹோட்டல் நிர்வாகத்தையும் மாநகராட்சி அணுகியுள்ளது. அந்த ஹோட்டல்கள் இருக்கும் பகுதியில் சுவர்களை அழகுபடுத்த அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

அதுபோல் சில சமூக நல அமைப்புகளும், இளைஞர் சங்கமும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு வரையப்படும் ஓவியங்கள் மீது நோட்டீஸ் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை அப்பகுதி மக்கள் கண்காணித்து வருகிறார்கள் என்றார் அவர்.

Last Updated on Thursday, 24 September 2009 06:03