Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லைக்கு அக். 13, 14-ல் ஸ்டாலின் வருகை: ரூ.100 கோடி பணிகளை தொடக்கி வைக்கிறார்

Print PDF

தினமணி 24.09.2009

நெல்லைக்கு அக். 13, 14-ல் ஸ்டாலின் வருகை: ரூ.100 கோடி பணிகளை தொடக்கி வைக்கிறார்

திருநெல்வேலி, செப். 23: திருநெல்வேலி மாவட்டத்தில் அக்டோபர் 13, 14 ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் துணை முதல்வர் மு.. ஸ்டாலின் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள திட்டப் பணிகளைத் தொடக்கி வைக்க உள்ளார்.

இம் மாவட்டத்தில் துணை முதல்வர் பங்கேற்றும் இரண்டு நாள் நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு சட்டப் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் பேசியதாவது:

இம் மாவட்டத்தில் அக்டோபர் 13, 14 ஆகிய இரண்டு நாள்களும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் கலந்து கொள்கிறார். அக்டோபர் 13 ஆம் தேதி காலையில் ராதாபுரம் பஸ்நிலையம், பெரியார் சமத்துவபுரம் ஆகியவற்றை அவர் திறந்து வைக்கிறார். இந்த விழாக்களில் அரசுத் துறைகள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்குவார்.

அன்று மாலையில் திருநெல்வேலியில் நடைபெறும் அரசு விழாவில், மாநகராட்சிக்கான குடிநீர் திட்டப் பணிகளையும், ரூ.50 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளையும் தொடக்கி வைக்கிறார். மேலும், 2,000 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சுழல் நிதியையும் அவர் வழங்க உள்ளார்.

அக்டோபர் 14 ஆம் தேதி காலையில் தென்காசியில் நடைபெறும் அரசு விழாவில், அங்கு ரயில்வே பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்லை நாட்டி வைக்கிறார் ஸ்டாலின்.

இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் மொத்தம் சுமார் ரூ. 100 கோடி மதிப்புள்ள திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன என்றார் ஆட்சியர்

கூட்டத்தில், மேயர் அ.லெ. சுப்பிரமணியன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் வீ. கருப்பசாமி பாண்டியன், என். மாலைராஜா, மு. அப்பாவு ஆகியோர் பேசினர். மாவட்ட வருவாய் அலுவலர் பெ. ரமண சரஸ்வதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் ம. கிரஹாம்பெல், துணை மேயர் கா. முத்துராமலிங்கம், மாநகராட்சி ஆணையர்

பாஸ்கரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் உல. ரவீந்திரன், சுற்றுலா அலுவலர்

செல்லப்பா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 24 September 2009 06:05