Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுற்றுச்சூழல் பூங்காவில் படகு சவாரி மீண்டும் தொடக்கம் பெரியவர்களுக்கு கட்டணம் ரூ.20, சிறியவர்களுக்கு ரூ.15

Print PDF

தினத்தந்தி               26.06.2013

சுற்றுச்சூழல் பூங்காவில் படகு சவாரி மீண்டும் தொடக்கம் பெரியவர்களுக்கு கட்டணம் ரூ.20, சிறியவர்களுக்கு ரூ.15

சுற்றுச்சூழல் பூங்காவில் மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. பெரியவர்களுக்கு கட்டணமாக ரூ.20ம், சிறியவர்களுக்கு ரூ.15ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

படகுசவாரி

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா உள்ளது. ஏராளமான அபூர்வ மரங்கள் உள்ள இந்த பூங்காவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பொழுது போக்கிற்காக வந்து செல்கின்றனர்.

இந்த பூங்காவில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படகு சவாரிக்காக சிறிய செயற்கை குளம் அமைக்கப்பட்டு படகு இயக்கப்பட்டது. அதன்பின் படகுகள் பழுது ஆனதாலும், குளத்தில் தண்ணீர் நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டதாலும் படகு போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.

சீரமைக்கும் பணி

இந்த நிலையில் படகு சவாரியை மீண்டும் செயல்படுத்த மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பம்பரமாக சுழன்று படகு சவாரிக்கான ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி செயற்கை குளத்தில் தேங்கி இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, சுவர்களில் வர்ணம் அடிக்கப்பட்டது. அதன்பின் பழுதான படகுகள் சீரமைக்கும் பணி நடந்தது.

இந்த நிலையில் படகு சவாரியை மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால் முன்னிலையில் மேயர் ராஜன் செல்லப்பா நேற்று காலை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர் பொறியாளர் (பொறுப்பு) மதுரம் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அங்கிருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் படகு சவாரி மேற்கொண்டனர்.

கமிஷனர் தகவல்

இது குறித்து மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால் கூறியதாவது:–

பொதுமக்களின் பொழுது போக்கிற்காக நிறுத்தப்பட்டு இருந்த படகு சவாரி மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக செயற்கை குளத்தில் 150 லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக 2 படகுகள் மட்டும் விடப்பட்டுள்ளன. ஒரிரு தினங்களில் கூடுதலாக 4 படகுகள் விடப்படும். விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் இருந்து இரவு வரை படகு சவாரி இருக்கும். மற்ற நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இருக்கும்.

பெரியவர்களுக்கு கட்டணமாக ரூ.20–ம், சிறியவர்களுக்கு ரூ.15–ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.