Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி               27.06.2013

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

வீடுகள் தோறும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதில் நகர்மன்ற உறுப்பினர்களும், நகராட்சி ஊழியர்களும் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

 ராசிபுரம் நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் ஆலோசனைக் கூட்டம் ராசிபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

 தமிழகத்தில் பருவ மழை குறைந்து, இதனால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து போனதால், பல்வேறு இடங்களில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதுகாக்க மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை மீண்டும் தீவிரமாக அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

 இந்த நிலையில், ராசிபுரம் நகராட்சி அலுவலகம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. முன்னதாக, நகராட்சி நடுநிலைப் பள்ளி முன்பாக தொடங்கிய பேரணியை நகர்மன்ற தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

 இதில், பேண்ட் வாத்தியங்கள் முழங்க திரளான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று, மழைநீரின் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தட்டிகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியவாறும் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர். பின்னர், நகர்மன்ற கூட்ட அரங்கில் நகராட்சி ஊழியர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்புத் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 இதில் நகர்மன்ற தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் பேசியது:

 முதலில் நகர்மன்ற உறுப்பினர்களும், நகராட்சி பணியாளர்களும் தங்களது வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி ஏற்படுத்தி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். குடியிருப்புகள், அரசுக் கட்டடங்கள், தொழில்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றில் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.

 இதில், நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.வெங்கடாஜலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.