Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை மாவட்டத்தில் அடையாள அட்டைக்கு 7 லட்சம் பேர் புகைப்படம் எடுத்துள்ளனர்

Print PDF

தினத்தந்தி            11.07.2013

கோவை மாவட்டத்தில் அடையாள அட்டைக்கு 7 லட்சம் பேர் புகைப்படம் எடுத்துள்ளனர்

கோவை மாவட்டத்தில் அடையாள அட்டைக்கு 7 லட்சம் பேர் புகைப்படம் எடுத்து உள்ளனர். மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் பெயர்ந்தவர்கள் புகைப்படம் எடுக்க சிறப்பு வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

அடையாள அட்டை

கடந்த 2010–ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின்படி கோவை மாவட்டத்தில் 32 லட்சம் மக்கள் உள்ளனர். அவர்களில் பலருக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

அந்த அட்டைக்கு பதிலாக கூடுதல் தகவல்கள் கொண்ட தேசிய குடியுரிமை அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியாக புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

புகைப்படம் எடுக்கும் பணி

தற்போது கோவை மாநகராட்சியில் மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 45, 47, 48 ஆகிய வார்டுகளிலும், பொள்ளாச்சி தாலுகாவில் சூலேஸ்வரன்பட்டி, ஜமீன்கோட்டம்பட்டி, ஊஞ்சவேலம்பட்டி ஆகிய பகுதிகளிலும், கோவை வடக்கு தாலுகாவில் கூடலூர் பேரூராட்சியிலும், மேட்டுப்பாளையத்தில் சிறுமுகையிலும், வால்பாறை நகராட்சியில் 10–வது வார்டிலும் ஸ்மார்ட் கார்டுக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்காக புகைப்படம் எடுக்கும் பணி நடக்கும் பள்ளிகளுக்கு சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று புகைப்படம் எடுத்து செல்கிறார்கள்.

இதுவரை கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டைக்கு எத்தனைபேர் புகைப் படம் எடுத்து உள்ளனர் என்று அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

7 லட்சம் பேர்

ஸ்மார்ட் கார்டில் ஒருவரின் 10 விரல் ரேகை, கருவிழி படல உருவம் இருக்கும். இந்த கார்டை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அந்த கார்டில் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் பெயர், தொழில் உள்பட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டு இருக்கும். 5 வயது முடிந்த அனைவருக்கும் இந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் புகைப்படம் எடுத்து உள்ளனர். இன்னும் 25 லட்சம் பேர் புகைப்படம் எடுக்க வேண்டும். புகைப்படம் எடுத்தவர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் புகைப்படம் எடுத்த பின்னர் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

இடம் பெயர்ந்தவர்களுக்கு வசதி

ஒரு இடத்தில் புகைப்படம் எடுத்த பின்பு அங்கு விடுபட்டவர்கள் இருந்தால், மீண்டும் அந்த இடத்துக்கு சென்று புகைப்படம் எடுக்கப்படும். புகைப்படம் எடுக்க செல்லும் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு ஆவணங்களையும் கண்டிப்பாக எடுத்துச்செல்ல வேண்டும்.

மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் மாறி வந்தவர்கள், தங்கள் பகுதியில் நடக்கும் புகைப்படம் எடுக்கும் பகுதிக்கு சென்று தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் அவர்களுக்கு 3 மாதம் கழித்து புகைப்படம் எடுக்கப்படும். ஒரே மாவட்டத்திற்குள் இடம் பெயர்ந்தவர்கள், தங்களிடம் இருக்கும் தேசிய மக்கள் தொகை கணக்கீட்டின்போது கொடுக்கப்பட்ட ரசீதை கொண்டு சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.

15–ந் தேதி கிழக்கு மண்டலம்

மேலும் கோவை மாநகராட்சியில் கிழக்கு மண்டலத்தில் வருகிற 15–ந் தேதியும், தெற்கு மண்டலத்தில் 21–ந் தேதியும் புகைப்படம் எடுக்கப்பட உள்ளது. பின்னர் ஆகஸ்டு மாதத்தில் வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு புகைப்படம் எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.