Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மேயர் சசிகலாபுஷ்பா தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி            11.07.2013

தூத்துக்குடியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மேயர் சசிகலாபுஷ்பா தொடங்கி வைத்தார்


தூத்துக்குடியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி மேயர் சசிகலாபுஷ்பா தொடங்கி வைத்தார்.

மழைநீர் சேகரிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 2003–ம் ஆண்டு அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு வைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி பெரும்பாலான வீடுகள், கடைகள், வணிக வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் வைக்கப்பட்டன. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 1 லட்சத்து 28 ஆயிரம் கட்டிடங்களில் 64 ஆயிரம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு உபகரணம் அமைக்கப்பட்டு உள்ளது.

தற்போது இதில் சேதம் அடைந்ததை புதுப்பிக்கவும், மழைநீர் சேகரிப்பு உபகரணம் அமைக்காத கட்டிடங்களில் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தாதவர்களின் சட்டம் 295 ஏ பிரிவின் கீழ் குடிநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

விழிப்புணர்வு பேரணி

இதனால் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடந்தது. பேரணியை மாநகராட்சி மேயர் சசிகலாபுஷ்பா தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆணையாளர் சோ.மதுமதி முன்னிலை வகித்தார். பேரணியில் தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள 34 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

பேரணி தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கி, பாளையங்கோட்டை ரோடு, டபிள்யூ.ஜி.சி. ரோடு வழியாக பழைய மாநகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. பேரணியில் சென்ற மாணவ–மாணவிகள் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தியபடி சென்றனர்.

பாதுகாக்க..

இது குறித்து மேயர் சசிகலாபுஷ்பா கூறும் போது, மழைநீரை சேகரிக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். தூத்துக்குடி கடல் நீர் உள்ளே புகும் அபாயம் உள்ள பகுதி. இங்கு மழைநீரை பூமிக்குள் செலுத்துவதன் மூலம் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும். இதனால் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்படுகிறது என்று கூறினார்.பேரணியில் துணை மேயர் சேவியர், மாநகராட்சி என்ஜினீயர் ராஜகோபால், இளநிலை என்ஜினீயர் சரவணன் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.