Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

முதல்வருக்கு, தஞ்சை நகராட்சி நன்றி தீர்மானம்தொடக்க பள்ளிகளில் 1 லட்சம் மாணவர் சேர்ப்பு

Print PDF
தினமலர்        31.07.2013

முதல்வருக்கு, தஞ்சை நகராட்சி நன்றி தீர்மானம் தொடக்க பள்ளிகளில் 1 லட்சம் மாணவர் சேர்ப்பு


தஞ்சாவூர்: கல்வித்துறையில் நலத்திட்டங்களை அமல்படுத்தல், தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில், நடப்பாண்டு ஒரு லட்சம் மாணவ, மாணவியர் கூடுதலாக சேர்க்க நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெ.,வுக்கு நன்றி தெரிவித்து, தஞ்சை நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தஞ்சை நகராட்சி கூட்டம் தலைவர் சாவித்திரி (அ.தி.மு.க.,) தலைமையில் நடந்தது. கமிஷனர் ரவிச்சந்திரன், நகராட்சி பொறியாளர் சீனிவாசன், நகர்நல அலுவலர் சிவநேசன், முதுநிலை நகரமைப்பு அலுவலர் இளங்கோவன், வருவாய் அலுவலர் சுரேஷ்குமார், கணக்கர் கிளமெண்ட் அந்தோணிராஜ் உள்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.

தஞ்சை நகராட்சியின் 2012 - 13ம் ஆண்டு நிர்வாக அறிக்கையை கமிஷனர் ரவிச்சந்திரன் வெளியிட, தலைவர் சாவித்திரி பெற்றுக்கொண்டார்.இதைத்தொடர்ந்து, கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு:சன் ராமநாதன், தி.மு.க.,: கல்லணை கால்வாயில் குடிநீருக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் குடிநீருக்கு மட்டுமின்றி விவசாயத்துக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது. ஆனால், அவசியம் கருதி குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நகராட்சி அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கமிஷனர் ரவிச்சந்திரன்: தஞ்சை நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை அறவே போக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மின்விளக்குகள் தற்போது கூடுதலாக வாங்கப்பட்டுள்ளன. பழுதடைந்த மின்விளக்கு, கம்பங்கள் பழுது நீக்கி சரி செய்யப்படும்.சண்முகபிரபு, அ.தி.மு.க.,: பழைய ஹவுசிங் யூனிட் அருகே மத்திய நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கிருந்து வெளியேறும் வண்டுகள், அருகேயுள்ள குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் தொட்டிகளில் விழுகிறது.

இதனால், குடிநீரை பயன்படுத்தவே மக்கள் பயப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட உணவு பொருட்களில் இருந்து வண்டுகள் வந்துள்ளன. இந்த வண்டுகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கமிஷனர் ரவிச்சந்திரன்: சேமிப்பு கிடங்குகளிலுள்ள வண்டுகளை அழிக்க வேண்டும் என, கிடங்கு அதிகாரிகளிடம் நகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளோம். விரைவில் தீர்வு காணப்படும்.கனகராஜ், அ.தி.மு.க.,: கடந்த மூன்று மாதமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், மக்கள் அவதிப்படுகின்றனர்.

எனவே, குடிநீர் பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.முன்னதாக, கூட்டத்தில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுத்து நிறுத்தி, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் சிபியின் ஒப்புதலுடன் 500 கோடி மதிப்புள்ள பங்குகளை மீட்ட முதல்வரின் சாதனைக்கு நன்றி பாராட்டுவது.

தஞ்சை மாவட்டத்தில், வாகன பயணத்தை குறைக்கும் வகையில், 52 கோடி ரூபாய் செலவில் புறவழிச்சாலை அமைக்க உத்தரவிட்டதற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக 3 ஆயிரம் கன அடி நீருடன் மேலும் கூடுதலாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டதற்கும், ரமலான் நோன்புக்காக முஸ்லீம் மக்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழகம் முழுவதும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களுக்கு நான்காயிரம் மெட்ரிக் டன் இலவச அரிசியை வழங்கியதற்கும், கடந்த ஓராண்டில், அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவர் கூடுதலாக, நான்கு லட்சத்து 14 ஆயிரத்து 547 மாணவ, மாணவியரை சேர்க்க நலத்திட்டங்களை அமல்படுத்தி, நடவடிக்கை எடுத்ததற்கும், முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.