Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலைகளில் பள்ளம் தோண்டுவதை தவிர்க்க வேண்டும்: அரசுத் துறைகளுக்கு மேயர் வேண்டுகோள்

Print PDF

தினமணி 26.09.2009

சாலைகளில் பள்ளம் தோண்டுவதை தவிர்க்க வேண்டும்: அரசுத் துறைகளுக்கு மேயர் வேண்டுகோள்


சென்னை, செப். 25: ""குடிநீர் இணைப்புப் பணிகளுக்காக சாலைகளில் பள்ளம் தோண்டுவதை அரசுத் துறைகள் தவிர்க்க வேண்டும்'' என்று சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மழைக்காலத்தை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதில், மின் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இப்போதே தொடங்குங்கள்... ""கடந்த ஆண்டு மழைக் காலத்தில் வெள்ளம் புகுந்த இடங்களை அடையாளம் கண்டு, அந்தப் பகுதிகளில் இப்போதே பணியாளர்களை அமர்த்தி மின்சாரம் கசியாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மின் துறை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும்'' என்றார் ஆணையர் ராஜேஷ் லக்கானி.

மீன் வளத்துறை ஒத்துழைப்பில்லை: அப்போது, பேசிய தீயணைப்புத் துறை அதிகாரிகள், ""வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்த 30 ரப்பர் படகுகள் தயார் நிலையில் உள்ளன. கடந்த ஆண்டு ரப்பர் படகுகளுடன், கட்டுமரங்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மீன்வளத் துறையினர் போதிய ஒத்துழைப்பு தராததால் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இரவில் மீட்புப் பணி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. படகுகளையும், அவற்றை இயக்க பணியாளர்களையும் அவர்கள் தரவில்லை'' என்றனர். இதைத் தொடர்ந்து, "மீன்வளத் துறை இந்த ஆண்டு போதிய ஒத்துழைப்பு தரவேண்டும்' என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆண்டு 200 கி.மீ.,க்கும் மேலாக சாலைகளில் பள்ளம் தோண்டி, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் பணி செய்துள்ளது.

""மழை காலங்களில் இதுபோல் பணி மேற்கொள்வது, அதிக சாலை விபத்துகளை ஏற்படுத்தும். எனவே, அக்டோபர் 1-ம் தேதி முதல் சாலைகள் தோண்டுவதை நிறுத்த வேண்டும். தவிர்க்க முடியாத இடங்களில் முழு தயார் நிலையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்'' என மேயர் அறிவுறுத்தினார்.

"நெடுஞ்சாலைத் துறையினர், அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அண்ணா சாலை உள்ளிட்டப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவுநீர்க் கால்வாய்களில் தூர்வாரும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும்' என்றார் அவர்.

ஆக்கிரமிப்புகளை விரைந்து... இதைத் தொடர்ந்து பேசிய ஆணையர் லக்கானி, ""சைதாப்பேட்டை அடையாறு ஆறு, விருகம்பாக்கம் கால்வாய் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித் துறையினர் விரைந்து அகற்ற வேண்டும். தூர்வாரும்போது வெளிப்படும் கழிவுகளை, கால்வாய் ஓரம் சேமிக்காமல் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும்.

ரயில்வே துறை கட்டுப்பாட்டில் வரும் ஐ.சி.எஃப். அருகில் உள்ள எய்ன்ஸ்லி கால்வாயில் பல மாதங்களாக தூர்வாரும் பணி நடைபெறவில்லை. அதை உடனடியாக ரயில்வே கவனிக்க வேண்டும்'' என்றும் அவர் கேட்டுகொண்டார்.