Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடுத்தர மக்களின் வரப்பிர‘சாதமாக’ மாறிவிட்ட அம்மா உணவகங்கள் தனியார் ஓட்டல்களில் சாதம் விலை குறைப்பு

Print PDF

தினத்தந்தி                17.08.2013

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடுத்தர மக்களின் வரப்பிர‘சாதமாக’ மாறிவிட்ட அம்மா உணவகங்கள் தனியார் ஓட்டல்களில் சாதம் விலை குறைப்பு

 

 

 

 

 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அம்மா உணவகங்களின் சாதங்கள் நடுத்தர மக்களின் வரப்பிரசாதமாக மாறிவிட்ட சூழ்நிலையில், தனியார் ஓட்டல்களில் சாதங்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

மலிவு விலை உணவக திட்டம்

சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்களும் சென்னைக்கு பணி நிமித்தமாக வந்து செல்பவர்களும் பயன் பெறும் வகையில் சுகாதார மற்றும் தரமான உணவுகளை மலிவு விலையில் வழங்குவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 19–ந்தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதா மலிவு விலை உணவக திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அன்று 15 மண்டலங்களில், மண்டலத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் 15 மலிவு விலை சிற்றுண்டி உணவகம் தொடங்கப்பட்டது. பின்னர் வார்டுக்கு ஒன்று வீதம் விரிவாக்கப்பட்டு தற்போது 200 உணவகங்கள் ‘அம்மா உணவகம்’ என்ற பெயரில் இயங்கி வருகின்றன. மேலும் சென்னை முழுவதும் 1,000 அம்மா உணவகங்களை விரிவாக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிர பணியாற்றி வருகின்றனர்.

நடுத்தர மக்களின் வரப்பிர‘சாதம்’

இந்த உணவகங்களில் காலையில் இட்லி ஒன்று 1 ரூபாய்க்கும், மதியம் சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர்சாதம் 3 ரூபாய்க்கும் வழங்கப்பட்டன. பின்னர் பொதுமக்களின் வரவேற்பை தொடர்ந்து, காலையில் 5 ரூபாய்க்கு பொங்கலும், மதியம் 5 ரூபாய்க்கு எலுமிச்சை சாதமும், 5 ரூபாய்க்கு கருவேப்பிலை சாதமும் கூடுதலாக வழங்கப்பட்டன. ஏழை எளிய மக்களுக்காக தொடங்கப்பட்டு அம்மா உணவகங்களில் வழங்கப்பட்டு வரும் சாதங்கள் தற்போது நடுத்தர மக்களின் வரப்பிர‘சாதமாக’ மாறி முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெரும் வரவேற்பை தேடித்தந்துள்ளன.

ஐ.டி. நிறுவன ஊழியர்கள்

பெருகி வரும் விலைவாசி உயர்வினால் தற்போது ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் நடுத்தர வகுப்பை சேர்ந்த ஏராளமானவர்கள் இந்த அம்மா உணவகங்களில் வந்து சாப்பிடுகின்றனர்.

சென்னை சாந்தோம் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் அருகில் உள்ள ஐ.டி. நிறுவனம், காதுகேளாதோருக்கான கல்வி நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் மட்டும் அல்லாமல் ஆட்டோ டிரைவர்கள், கடைகளில் வேலை பார்ப்பவர்கள், காவலாளிகள் என ஏராளமானோர் வந்து சாப்பிடுகின்றனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதுகிறது.

இங்கே வழக்கமாக சாப்பிடும் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் புவனேஷ் என்பவர் கூறும்போது, நான் பகல்வேளை பணிக்கு வரும்போதெல்லாம் இங்கு வந்து தான் சாப்பிடுவேன். இங்கு சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதங்கள் மிகவும் நன்றாக உள்ளன. பத்து ரூபாயில் எனது மதிய உணவு முடிந்துவிடுகிறது. இதை முதல்–அமைச்சர் எங்களை போன்ற நடுத்தர மக்களுக்கு வழங்கிய வரப்பிரசாதமாகவே கருதுகிறேன். இங்கு உணவு மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் சமைக்கப்பட்டு பரிமாறப்படுகின்றன. இந்த சாதங்களுடன் ஊறுகாய் அல்லது பப்படம் அல்லது வடாகங்கள் ஏதாவது ஒன்று வழங்கினால் மிகவும் நன்றாக இருக்கும் என்று கூறினார்.

ஓட்டல்களில் சாதங்களின் விலை குறைப்பு

அம்மா உணவகங்களில் தற்போது 20 சதவீதம் பயனாளிகள் அதிகரித்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க அம்மா உணவகங்கள் உள்ள இடங்களில் இருக்கும் தனியார் ஓட்டல்களில் சாதங்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.