Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

முதலிடத்தை தொடர்ந்து தக்கவைப்போம்

Print PDF

தினமணி                17.08.2013

முதலிடத்தை தொடர்ந்து தக்கவைப்போம்

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிக்கான விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், மக்களுக்கு கூடுதல் சேவை அளிப்பதன் மூலமாக முதலிடத்தை தொடர்ந்து தக்கவைப்போம் என்றும், ஈரோடு மேயர் ப.மல்லிகா பரமசிவம் கூறினார்.

 சென்னை கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறந்த மாநகராட்சிக்கான விருதை முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து மேயர் ப.மல்லிகா பரமசிவம் வியாழக்கிழமை பெற்றுக்கொண்டார். ரூ.25 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

 விருதைப் பெற்றுக்கொண்ட மேயர், ஈரோட்டுக்கு வெள்ளிக்கிழமை திரும்பினார். இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், முக்கியப் பிரமுகர்கள், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மேயரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 பின்னர், செய்தியாளர்களிடம் மேயர் கூறியது:

 மக்களுக்கு என்னென்ன வசதிகள் தேவை என்பதை அறிந்து சேவையாற்ற வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் ஈரோடு மாநகராட்சி மக்களின் தேவை அறிந்து பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. அதற்காக, தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக ஈரோடு மாநகராட்சியைத் தேர்வு செய்தற்கு முதல்வருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விருது ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. வரும் காலங்களில் ஈரோடு மாநகரை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இந்த விருது உதவும். மக்களின் தேவைகளை அறிந்து இன்னும் சிறப்பாகப் பணியாற்றி அடுத்த ஆண்டும் சிறந்த மாநகராட்சியாக கொண்டு வருவோம். முதலிடத்தை தொடர்ந்து தக்கவைப்போம் என்றார்.

கொண்டாட்டம்

 தமிழ்நாடு மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் வெங்கிடுசாமி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பின்னர், மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, ஆணையாளர் மு.விஜயலட்சுமி ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 சங்க கெüரவத் தலைவர் ராஜாமணி, பொதுச் செயலாளர் பிரேம்குமார், துணை தலைவர் திருமூர்த்தி, பிரசார செயலாளர் பாஸ்கர், அமைப்பு செயலாளர் ஸ்ரீமுத்துசாமி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.