Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுவர்களுக்கு சுண்ணாம்பு அடித்தனர் மாநகராட்சி பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த போலீசார்

Print PDF
தினகரன்                19.08.2013

சுவர்களுக்கு சுண்ணாம்பு அடித்தனர் மாநகராட்சி பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த போலீசார்


கோவை, : கோவை கருப்ப கவுண்டர் வீதியிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை மேற்கு பகுதி போக்குவரத்து போலீசார் நேற்று சுத்தம் செய்து வண்ணம் பூசினர்.

கோவை மாநகர போக்குவரத்து போலீசார் காவல்துறை பணிகளோடு பொதுமக்களுக்கு பயனுள்ள சமூகசேவை பணிகளில் கவனம் செலுத்தி, அப்பணிகளை வாரந்தோறும் மேற்கொள்ள வேண்டும் என போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் துணை கமிஷனர் (போக்குவரத்து) ராஜசேகரன் மேற்பார்வையில் கோவை மாநகர கிழக்கு மற்றும் மேற்கு பிரிவு போக்குவரத்து போலீசார் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்  உள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகள், அரசு மாணவ, மாணவிகளின் விடுதிகள் போன்றவற்றை பராமரிப்பு செய்யும் பணியை வாரத்திற்கு ஒருநாள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி, கோவை மேற்கு பகுதி போக்குவரத்து போலீசார் போலீஸ் உதவி கமிஷனர் ராஜ்கண்ணா (மேற்கு போக்குவரத்து பிரிவு), இன்ஸ்பெக்டர் சரவணன்(மேற்கு போக்குவரத்து பிரிவு) ஆகியோர் தலைமையில் 5 சப் - இன்ஸ்பெக்டர்கள், 35 போலீசார் கருப்ப கவுண்டர் வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று காலை 7 மணி முதல் பராமரிப்பு பணியை மேற்கொண்டனர். பள்ளி வளாகத்தில் உள்ள முட்புதர்கள், காய்ந்த செடி, கொடிகளை அகற்றினர். பள்ளி கட்டட சுவர்களை சுத்தப்படுத்தி, வெள்ளை அடித்தனர். துருப்பிடித்து காணப்பட்ட ஜன்னல் கம்பிகள் மற்றும் கதவுகளை சுத்தப்படுத்தி பெயின்ட் அடித்தனர். பள்ளி வளாகத்தை ஆக்கிரமித்திருந்த குப்பைகளை அகற்றி அவற்றை தூய்மைப்படுத்தினர். இந்த பணி மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்தது.

இதுகுறித்து மேற்கு பிரிவு போக்குவரத்து போலீசார் கூறுகையில், “போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் பள்ளிகள், அரசு விடுதிகள் பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. போக்குவரத்து போலீசார் இந்த சமூக சேவைப்பணி தொடர்ந்து வாரந்தோறும் நடத்தப்படும்,’’ என்றனர்.