Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விற்பனை குறைந்ததால் அம்மா உணவகங்களில் 100 பேருக்கான உணவு தயாரிப்பு குறைப்பு

Print PDF

தினகரன்            24.08.2013

விற்பனை குறைந்ததால் அம்மா உணவகங்களில் 100 பேருக்கான உணவு தயாரிப்பு குறைப்பு

மதுரை: அம்மா உணவகங்களில் 100 பேருக்கான உணவு தயாரிப்பு குறைக்கப்பட்டுள்ளது. விற்பனை இல்லாததாலும், நிதி பற்றாக்குறையாலும் மாநகராட்சி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரையில் அம்மா திட்ட மலிவு விலை உணவகங்கள் மேலவாசல், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம், ஆரப்பாளையம், ஆனையூர், புதூர், காந்திபுரம், ராமவர்மா நகர், ராமராயர் மண்டபம், சி.எம்ஆர்.ரோடு ஆகிய 10 இடங்களில் உள்ளன. இந்த உணவகங்களில் தினமும் காலை 7 முதல் 10 மணி வரை இட்லி ஒன்றுக்கு ரூ.1 வீதமும், மதியம் 12 முதல் 3 மணி வரை ரூ.5க்கு சாம்பார் சாதம், ரூ.3க்கு தயிர் சாதம் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 3 மாத ஆய்வில் 7 உணவகங்களில் தயாரிக்கப்பட்ட இட்லி மற்றும் உணவு விற்பனையாகி விடுகின்றன என்பது தெரிந்தது.

காந்திபுரம், பழங்காநத்தம், சிஎம்ஆர் ரோடு ஆகிய 3 இடங்களிலுள்ள தயாரிக்கப்படும் உணவு முழுமையாக விற்பனை இல்லை. இதனால் மிஞ்சியதை வேறு உணவகங்களுக்கு அனுப்பி விற்கும் நிலை உள்ளது. மாநகராட்சி கணக்கின்படி அடக்க விலை ஒரு இட்லிக்கு ரூ.3.64, சாம்பார் சாதம் ரூ.14.73 தயிர் சாதம் ரூ.7.44. ஆனால் இட்லி ரூ.1 சாம்பார் சாதம் ரூ.5 தயிர் சாதம் ரூ.3 என விற்கப்படுகிறது. இதன்படி ஒரு இட்லிக்கு ரூ.2.64 சாம்பார் சாதத்திற்கு ரூ.9.73 தயிர் சாதத்திற்கு ரூ.4.44 பற்றாக்குறை ஏற்படுகிறது.

 ஒரு உணவகத்திற்கு ஒருநாள் பற்றாக்குறை ரூ.7,419 வீதம் 10 உணவகங்களுக்கு ரூ.74 ஆயிரத்து 190 ஆகிறது. இது மாநகராட்சி பொதுநிதியில் இருந்து செலவிடப்படுகிறது. தவிர இந்த உணவகங்கள் அமைக்க மொத்தம் ரூ.2.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. உணவு விற்பனையில் ஆண்டுக்கு ரூ.2 கோடியே 70 லட்சம் மாநகராட்சி நிதி ஒதுக்க வேண்டும். இன்னும் அரசு மானியம் வராததால் மாநகராட்சி நிதியே செலவிடப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் காந்திபுரம், பழங்காநத்தம், சிஎம்ஆர் ரோடு ஆகிய உணவகத்தில் சரிவர விற்பனை இல்லை. மாநகராட்சியின் நிதி நிலையை கருத்தில் கொண்டு இந்த உணவகங்களில் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் 100 பேருக்கான உணவு அளவை குறைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இந்த உணவகங்களில் 300 பேருக்கான உணவு தற்போது 200 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது போன்று விற்பனை ஆகாத மற்ற உணகங்களிலும் எண்ணிக்கையை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அம்மா உணவக பணியாளர்களுக்கு கடந்த ஜூலை மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. நிதி நெருக்கடியால் சம்பளம் போடவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பணியாளர்கள் தவிக்கின்றனர்.