Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பழனி நகர்மன்றக் கூட்டம்

Print PDF

தினமணி               02.09.2013

பழனி நகர்மன்றக் கூட்டம்

பழனி  நகர்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

   பழனி நகராட்சி, பழனியாண்டவர் ஹாலில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் வேலுமணி தலைமை வகித்தார்.  துணைத் தலைவர் முருகானந்தம், நகராட்சி பொறியாளர், அலுவலர்கள், கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். 

   கவுன்சிலர்கள் செபாஸ்டியன், கந்தசாமி, முஜிபுதீன் உள்ளிட்டோர் பழனியில் நிலவும் குடிநீர் பஞ்சம் குறித்து கேள்வி எழுப்பினர். மேலும், நகராட்சி பெயரால் குடிநீர் விநியோகம் செய்யும் தனியார் லாரிகள், நகராட்சி நீரை சில தனியாருக்கு குடம் ரூ. 3 வீதம் விற்பனை செய்வதாகவும் புகார் செய்தனர். இதை ஏராளமான கவுன்சிலர்கள் ஆமோதித்தனர்.

   கவுன்சிலர் சுப்ரமணி தனது வார்டில் ஆழ்குழாய் அமைக்க வலியுறுத்தினார். வாக்காளர் கணக்கெடுப்பில் பலரது பெயர்கள் விடுபட்டுள்ள நிலையில் ஆதார் அட்டைக்கு தங்கள் பெயர்களை பதிய முடியாத நிலையில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி இருப்பதாக ஏராளமான கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

   கவுன்சிலர் சுரேஷ் பாலாஜி மில், ஓம் சண்முகா தியேட்டர் இட்டேரி ரோடு சந்திப்பு பகுதியில் பஸ் நிறுத்தம் அமைக்க வலியுறுத்தினார். இதை கவுன்சிலர்கள் குமார், கார்த்தி ஆகியோர் ஆமோதித்தனர். கவுன்சிலர் முருகபாண்டியன் நகராட்சி பகுதிகளில் அமையவுள்ள ஆவின் நிலையங்கள் அனுமதி பெற்ற பின்னரே வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். 

   பெரியப்பா நகர் பகுதியில் அமைந்துள்ள உரக்கிடங்கால் நிலத்தடி நீர் மாசுபடுவது பற்றி கேள்வி எழுப்பிய போது உரக்கிடங்கில் உள்ள குப்பைகள் மூலம் மின்சாரம் தயாரிக்க மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக தலைவர் பதிலளித்தார். கவுன்சிலர் பத்மினி முருகானந்தம் கோடைகால நீர்த்தேக்கத்தை தூர்வார வேண்டும் எனத் தெரிவித்தார். 

   கவுன்சிலர் சுந்தர் அஞ்சலக சாலையில் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை நகராட்சி எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த போது, சம்பந்தப்பட்ட இடப் பிரச்னை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தார். பஸ்  நிலையத்தில் கடைக்கு முன்பு மூன்று அடி வரை பயன்படுத்த அனுமதித்தும், ஆக்கிரமிப்பின் போது அவை அகற்றப்பட்டதாக கவுன்சிலர்கள் தெரிவித்தனர். அப்போது மூன்று அடி பயன்படுத்த அனுமதியில்லை எனத் தலைவர் பதிலளித்தார்.