Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

15–ந்தேதி முதல் 'அம்மா' உணவகத்தில் 3 ரூபாய்க்கு 2 சப்பாத்தி

Print PDF

மாலை மலர்              10.09.2013

15–ந்தேதி முதல் 'அம்மா' உணவகத்தில் 3 ரூபாய்க்கு 2 சப்பாத்தி
சென்னை, செப். 10: ஏழை எளிய நடுத்தர மக்கள் விலைவாசி பிடியில் விடுபட சென்னையில் 'அம்மா மலிவு விலை உணவகம்' பிப்ரவரி மாதம் 19–ந்தேதி தொடங்கப்பட்டது. முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த திட்டம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

அம்மா உணவகத்தில் காலை 7 மணி முதல் 10 மணி வரை 1 இட்லி 1 ரூபாய்க்கும், மதிய உணவாக நண்பல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இட்லி தவிர பொங்கல்–சாம்பார் 5 ரூபாய்க்கும், மதிய உணவின்போது எலுமிச்சை சாதம் அல்லது கருவேப்பிலை சாதம் 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை வாங்கி சாப்பிட தினமும் கூட்டம் அலை மோதுகிறது. சென்னைக்கு வேலை தேடி வருபவர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், உழைக்கும் வர்க்கத்தினர், ஏழை தாய்மார்கள் பலர் அம்மா உணவகத்தில் தினமும் சாப்பிடுகின்றனர்.

அம்மா உணவகங்களில் இனி மாலை நேரங்களில் சப்பாத்தியும் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த மே மாதம் 15–ந்தேதி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார்.

200 மலிவு விலை உணவகங்களிலும் மாலை நேரத்தில் 2 சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் அல்லது குருமா 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த அறிவிப்பின்படி வருகிற 15–ந்தேதி முதல் அம்மா உணவகங்களில் சப்பாத்தி விற்பனை தொடங்கப்படுகிறது.

சப்பாத்திக்கு மாவு பிசையும் மிஷின் ஒரு மண்டலத்துக்கு 1 வீதம் 15 மண்டலத்துக்கு ரூ.4 கோடி செலவில் வாங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 1 கடைக்கு 2 ஆயிரம் சப்பாத்தி வீதம் 30 ஆயிரம் சப்பாத்தி 1 மண்டலத்திற்கு தயார் செய்யப்பட்டு 15 வார்டுகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதே போல் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் இருந்து 4 லட்சம் சப்பாத்தி தினமும் தயார் செய்யப்பட்டு அனுப்பப்படும்.

இதன் சோதனை ஓட்டம் நேற்று கோபாலபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் செய்து பார்க்கப்பட்டது. அப்போது சப்பாத்தி மிகவும் அருமையாக வந்தது. பருப்பு கடைசலும் குருமாவும் நன்றாக இருந்தது.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா 15–ந்தேதி சப்பாத்தி வினியோகத்தை தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து 200 வார்டுகளில் உள்ள அம்மா உணவகங்களிலும் தினமும் மாலை நேரங்களில் 3 ரூபாய்க்கு 2 சப்பாத்தி கிடைக்கும்.

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த அம்மா உணவகங்கள் மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டு தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.